/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
3வது மண்டல கூட்டம் 3 நிமிடத்தில் முடிந்தது
/
3வது மண்டல கூட்டம் 3 நிமிடத்தில் முடிந்தது
ADDED : டிச 16, 2024 10:48 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டல கூட்டம் துவங்கிய மூன்று நிமிடத்தில், தீர்மானம் 'ஆல் பாஸ்' என்று தெரிவித்து முடிவுக்கு வந்தது.
திருப்பூர் மாநகராட்சியின், 3வது மண்டல கவுன்சிலர்கள் கூட்டம், மண்டல குழு தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நேற்று துவங்கியது. தி.மு.க., கவுன்சிலர் காந்திமதி எழுந்து பேசத் துவங்கிய சில நொடிகளில் மின் சப்ளை நின்றது.
மைக்கை கையில் பிடித்தபடியே அவர், 'அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவு அளிக்கிறோம்.
எல்லா தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்' என்று கூறி விட்டு இருக்கையில் அமரக்கூட இல்லாமல், வெளியேறினார். மற்ற கவுன்சிலர்களும் பேசாமல் வெளியேறினர்.
கூட்டம் துவங்கிய மூன்று நிமிடங்களில் எந்த விவாதமும் இன்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிந்தது.
காங்., கவுன்சிலர் செந்தில்குமார் கூறுகையில், ''மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு ரத்து செய்வது குறித்த எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து, 18ம் தேதி (நாளை) போராட்டம் நடத்தும் சூழலில், அரசு இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
எங்கள் அதிருப்தியை ெவளிப்படுத்தும் வகையில், எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை,'' என்றார்.
காந்திமதி (தி.மு.க.,) கூறுகையில், ''மண்டல கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகளுக்கானது.
எனவே அவற்றை நிறைவேற்ற எங்கள் ஆதரவைத் தெரிவித்து விட்டு வெளியே வந்து விட்டோம். அதற்கு மேல் அங்கு ஒன்றும் இல்லை,'' என்றார்.