/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதியில்லை
/
அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதியில்லை
ADDED : ஜன 21, 2025 11:59 PM

திருப்பூர்; வீரபாண்டி, வஞ்சி நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரும் அவதி நிலவுகிறது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள நீர் நிலைகள், நீர் வழிப்பாதைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் நுாற்றுக்கணக்கானோர் நீண்ட காலமாக வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.
கோர்ட் உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பொதுப்பணித்துறை, மாநகராட்சி மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்டனர். வீடுகளை காலி செய்த பெரும்பாலானோருக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்பட்டது.
அவ்வகையில், 500 குடும்பங்களுக்கு வீரபாண்டி, வஞ்சி நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டு, அதில் 2 ஆண்டாக பயனாளிகள் வசித்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சுலோசனா: நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ள நிலையிலும், உரிய குடிநீர் வசதி ஏற்படுத்தவில்லை. கழிவு நீர் செல்ல உரிய வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. செப்டிக் டேங்க் நிரம்பி ரோட்டில் சென்று கழிவு நீர் தேங்குகிறது. இவ்வழியாக வாகனங்கள் செல்லும் போது வாரியிறைக்கப்படுகிறது. இதனால் சொல்ல முடியாத அளவுக்கு சிரமம் ஏற்படுகிறது. கழிவு நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
சுமதி: குடியிருப்பு பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்பிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகே தாழ்வாக உள்ள பாறைகள் சூழ்ந்த தாழ்வான இடத்தில் தேங்கி நிற்கிறது. சில சமயங்களில் வெளிப்பகுதியிலிருந்து வரும் சிறுவர்கள் இதில் இறங்கி விளையாடுகின்றனர். மழை நாட்களில் பெரும் சிரமம் நிலவுகிறது. கழிவு நீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும். கழிவு நீர் கால்வாய் அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.
குமரவேல்: இப்பகுதிக்கு சமுதாயக் கூடம் உள்ளிட்ட வசதி ஏற்படுத்த வேண்டும். வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்பை மாநகராட்சி நிர்வாகத்துக்கு கேட்டுப் பெற்று உரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை.