/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாம்பு வந்ததால் பள்ளிக்கு விமோசனம்
/
பாம்பு வந்ததால் பள்ளிக்கு விமோசனம்
ADDED : ஜூன் 20, 2025 02:28 AM

பல்லடம் : பல்லடம் அருகே, பள்ளி வளாகத்துக்குள் 'என்ட்ரி' கொடுத்த பாம்பால், நீண்ட நாள் பிரச்னைக்கு விமோசனம் கிடைத்தது.
பல்லடம் அடுத்த, 63 வேலம்பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 110 குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்துக்குள் கட்டப்பட்டு பழுதடைந்த பொது கழிப்பிடம் ஒன்று நீண்ட காலமாக அகற்றப்படாமல் உள்ளது.
அதை அகற்ற வலியுறுத்தி, பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று முன்தினம், பள்ளி வளாகத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்ததை தொடர்ந்து, பொதுக்கழிப்பிடம் உடனடியாக அகற்றப்பட்டது.
பெற்றோர் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பொது கழிப்பிடம், பராமரிக்கப்படாமல் சேதமடைந்து காணப்படுகிறது. இதை சுற்றி முட்செடிகள், புதர்கள் மண்டியுள்ளன. புதர்களுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வசித்து வருகின்றன. இவற்றால், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது எனவே, கழிப்பிடத்தை இடித்து அகற்றி, முட்செடிகள் புதர்களையும் அகற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம்.
இருப்பினும், கழிப்பிடத்தை அகற்ற வேண்டும் என்றால், உரிய அனுமதி பெற வேண்டும் என்றால் கூறி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். நேற்று முன்தினம், பள்ளி வளாகத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை நகர விடாமல் பூனை விரட்டி விட்டது. இது தொடர்பாக, மீண்டும் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடனடியாக பொக்லைன் வரவழைக்கப்பட்டு கழிப்பிடம் அகற்றப்பட்டது. நீண்ட நாள் பிரச்னைக்கு பாம்பின் வருகையால் விமோசனம் கிடைத்தது நிம்மதி அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.