/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முத்திரை பதிக்கப்போகும் அவிநாசி சித்திரைத் தேர்த்திருவிழா
/
முத்திரை பதிக்கப்போகும் அவிநாசி சித்திரைத் தேர்த்திருவிழா
முத்திரை பதிக்கப்போகும் அவிநாசி சித்திரைத் தேர்த்திருவிழா
முத்திரை பதிக்கப்போகும் அவிநாசி சித்திரைத் தேர்த்திருவிழா
ADDED : ஏப் 26, 2025 11:01 PM

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவுக்காக, தேர்களுக்கு வேகக்கட்டுப்பாடு முட்டி செய்வது, தேருக்கு சாரம் கட்டும் பணிகள், அலங்கரிக்கும் பணிகள், விக்கிரகங்கள் சுத்தப்படுத்தும் பணிகள் என தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்டதுமான அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தேர்த்திருவிழாவுக்காக, கடந்த ஒரு வார காலமாக தேரை அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, இரும்பிலான ஆங்கில்களை கொண்ட சிறிய மற்றும் பெரிய தேர் கட்டும் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது.
தேர் உறுதித்தன்மை
சான்றிதழ் பெறப்பட்டது
---------------
கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார் கூறியதாவது:
அவிநாசி தேர் திருவிழாவுக்காக, முதன்முறையாக, பொதுப்பணித்துறையில் தேரின் உறுதித் தன்மை குறித்து முன் உறுதிச் சான்றுக்காக விண்ணப்பிக்கப்பட்டு ஆய்வு செய்து சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. தேர்களுக்கு வார்னிஷ் அடிக்கப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்தில், ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்படும். தேர் வேகத்தை கட்டுப்படுத்தும் முட்டிகள் செய்யும் பணிகளும் நடைபெறுகிறது.
பக்தர்களுக்கு இன்சூரன்ஸ்
சன்னை மற்றும் குடில் முட்டிகள் போடுபவர்களும், பக்தர்களுக்கும் மூன்றாம் நிலை இன்சூரன்ஸ் எடுக்க உள்ளோம். கடும் வெயில் என்பதால், பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர் வழங்க, மூன்று உபயதாரர்கள் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில், நான்கு ரத வீதிகளிலும் ரோடு பணிகள் தரமாக செய்து தர கேட்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு பாதுகாப்பானதா?
இரண்டு இடங்களில், மொபைல் டாய்லெட், சின்டெக்ஸ் டேங்க் மூலம் தண்ணீர் கொடுப்பதற்கும் கேட்கப்பட்டுள்ளது. மின்வாரியத்திடம் மின் இணைப்புகள் பாதுகாப்பான முறையில் உள்ளனவா என உரிய தர ஆய்வை செய்து தர கேட்டுள்ளோம். தீயணைப்புத் துறை வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியனவும் தேரோட்டத்தின் போது உடன் வரும்.
---
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவுக்காக தயாராகி வரும் பெரிய தேர்.
பெரிய தேரை அலங்கரிப்பதற்காக இரும்பு குழாய்கள் மூலம் சாரம் கட்டும் பணிகள் நடக்கின்றன.
தேரோட்டத்தின்போது போடுவதற்காக தயாராகியுள்ள குடில் முட்டிகள்.