ADDED : பிப் 13, 2024 12:35 AM

அவிநாசி;அவிநாசி ஒன்றியம், நம்பியாம்பாளையம் ஊராட்சி, சுண்டக்காம் பாளையம் ஆதி திராவிடர் காலனி பகுதியில் உள்ள அறுபது வீடுகளில், 110 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அதில் வசித்து வரும் 15 நபர்களுக்கு நேற்று முன்தினம் பட்டா வழங்கப்பட்டது.
அப்பகுதியை சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் இரவு வார்டு உறுப்பினர் அனுசுயாவிடம் (தி.மு.க.,) கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆர்.ஐ., ராமலட்சுமி, எஸ்.ஐ., பேச்சிமுத்து ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, மனுக்களாக தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்குமாறு அறிவுறுத்தினர். நேற்று காலை, நம்பியாம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு சென்ற, பட்டா கிடைக்காதவர்கள், வி.ஏ.ஓ., பூங்கொடி, ஆர்.ஐ., ராமலட்சுமி ஆகியோரை முற்றுகையிட்டு, '30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர்களை புறக்கணித்து, முறைகேடாக வெளியூர் ஆட்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளதாக,' குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'பட்டா கிடைக்காதவர்கள் மனுவை ஆர்.ஐ.,யிடம் விண்ணப்பமாக கொடுத்தால், தாசில்தாரிடம் பரிந்துரைக்கப்படும்,' என கூறினார். பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தாசில்தார் மோகனனிடம் கேட்டதற்கு, ''தவறு நடந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.