/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாழ்வியல் தத்துவம் விளக்கும் தேர்த்திருவிழா; ஊர்கூடி தேர் இழுக்கும் அற்புத விழா
/
வாழ்வியல் தத்துவம் விளக்கும் தேர்த்திருவிழா; ஊர்கூடி தேர் இழுக்கும் அற்புத விழா
வாழ்வியல் தத்துவம் விளக்கும் தேர்த்திருவிழா; ஊர்கூடி தேர் இழுக்கும் அற்புத விழா
வாழ்வியல் தத்துவம் விளக்கும் தேர்த்திருவிழா; ஊர்கூடி தேர் இழுக்கும் அற்புத விழா
ADDED : ஏப் 16, 2025 11:43 PM
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமையை விளக்கும் அம்சமாக தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவிற்காக, புதிய தேர் அமைக்கப்பட்டு, இரண்டாவது ஆண்டாக, நடப்பாண்டும் புதிய தேரில் அம்மன் எழுந்தருள உள்ளார்.
புதிய எண்கோண வடிவத்தில், உயரம், அகலம் என பிரமாண்டமான தேரில், சுவாமிகள் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர்.
இத்தேர் சிறப்பு அம்சங்களுடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும், ஐந்து நிலைகளை கொண்டதாகவும், தேரின் மொத்த உயரம், 12 அடியாகவும், இதில் தேர்ப்பலகை, 9 அடி உயரத்திலும், சுவாமிகள் எழுந்தருளும் உற்சவருக்கான சிம்மாசனம், இரண்டடி உயரத்திலும், இலுப்ப மரம் மற்றும் தேக்கு மரம் கொண்டு அமைக்கபட்டுள்ளது.
தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன் எழுந்தருளியுள்ள கோவில்கள் மற்றும் அம்மன் அவதார சிற்பங்கள், வரலாற்று சிற்பங்கள் மற்றும் சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகன் சிற்பங்கள் என, 220 மரச்சிற்பங்களும், மனித வாழ்வியல் தத்துவம் விளக்கும் வகையில், 120 போதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
சிம்ம கொடியுடன் கலசம்
புதிய தேர் எண்கோண வடிவில் அதற்குரிய வடிவத்தில், புதிய கம்பிகள் இணைக்கப்பட்டு, பீடத்திற்கு மேல், 5 அடுக்கு மற்றும் புதிய கலசம் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், செம்பு தகட்டினால் அற்புத வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட, செம்பு தகட்டினால் ஆன, சிம்மக்கொடி அமைக்கப்பட்டுள்ளது.
பழைய தேரை விட, புதிய தேர் உயரமாகவும், அகலமாகவும், புதிய வடிவில் பிரமாண்டமாக காணப்படுகிறது. ஏறத்தாழ, 50 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
''கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பது போல், தேர் கோபுர வடிவத்தில், கலசம் கொண்டதாகும். பக்தர்களுக்கு அருள் பாலிக்க திருத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கும் அற்புத நிகழ்ச்சி, ஆண்டு தோறும் நடந்து வருகிறது.
தேரின் அமைப்பு அண்டத்தையும், மனித சரீரத்தையும் குறிப்பிடுவதாகும். முதல் அடுக்கு, குண்டலனிஸ்தானம், நாபி, இருதயம், கழுத்து, மஸ்தக அந்தஸ்தானம், மத்திய ஸ்தானம், மஸ்தக ஆதி ஸ்தானம், துவாதசாந்தம் என எட்டு அண்டத்தை அடுக்குகளாகக்கொண்டு, உச்சியிலிருக்கும் கும்பம், சோடசாந்தம், நடுவில் இருக்கும் துாண்கள் தத்துவங்கள், இரு குதிரைகள், சூரியன், சந்திரன், பத்து சக்கரங்கள் தச வாயுக்கள் என தத்துவத்தை விளக்கும் அம்சமாக குறிப்பிடப்படுகிறது.
அதாவது பிண்டத்துவ சரீரமாகிய தேரில், தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி, மனத்தை அசைவற்று, ஒரு நிலைப்படுத்தி, குண்டலினியிலிருந்து நாபிக்கும், கண்டத்திற்கும், நாசிக்கும், கண் வழியே புருவ மத்திக்கும் ஏற்றி, லயப்பட்டு, நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தை விளக்குவதே தேரின் அமைப்பாகும் என கூறப்படுகிறது.