/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேதனை தந்த வேதியியல் 'கடிக்காத' கணக்குப்பதிவியல்
/
வேதனை தந்த வேதியியல் 'கடிக்காத' கணக்குப்பதிவியல்
வேதனை தந்த வேதியியல் 'கடிக்காத' கணக்குப்பதிவியல்
வேதனை தந்த வேதியியல் 'கடிக்காத' கணக்குப்பதிவியல்
ADDED : மார் 10, 2026 05:40 AM

திருப்பூர்: பிளஸ் 2 வேதியியல் தேர்வு மாணவர்களுக்கு வேதனை தரும் வகையில் அமைந்தது. கணக்கு பதிவியல் ஓரளவு எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவியர் கூறினர்.
கடந்த, 2ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கி நடந்து வருகிறது. மொழித்தாள் தேர்வுகள் முடிந்த நிலையில், நேற்று முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் துவங்கியது. மாவட்டத்தில், 14 ஆயிரத்து 998 மாணவர்கள் வேதியியல், 10 ஆயிரத்து, 830 மாணவர்கள் கணக்குபதிவியல், 285 மாணவர் புவியியல் தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. கணக்குபதிவியல் தேர்வுக்கு, 233 பேரும், வேதியியல் தேர்வுக்கு, 68 பேரும், புவியியல் தேர்வுக்கு ஆறு பேரும் வரவில்லை.
கணக்குபதிவியல் தேர்வு குறித்து மாணவர்கள் கூறியதாவது:
கேள்வி புதியது ஜீவன்: பாடங்களுக்கு பின் இருந்து பெரும்பாலான கேள்விகள் இடம் பெற்றிருந்தது. ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் பெற முடியும். ஐந்து மதிப்பெண்ணில் கேள்விகள் புதியதாக இருந்தது. யோசித்து விடையளிக்க வேண்டியிருந்தது.
எதிர்பார்த்தோம் கோகுல்: இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண்ணில் வழக்கமாக கேட்கும் கணக்கு தொடர்பான கேள்விகளை குறைத்து, தியரி (கட்டுரை வடிவ) வினாக்கள் கேட்கப்பட்டதால், அதிக நேரம் எடுத்துக் கொண்டு எழுத வேண்டி இருந்தது. கட்டாய வினாவில் எதிர்பார்த்த கேள்வியே வந்திருந்தது.
தேர்ச்சி அதிகரிக்கும் கணக்குப்பதிவியல் ஆசிரியர்கள் கூறுகையில், 'முதல், இரண்டு பாடங்களின் கேள்விகள் இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண்ணில் கேட்டிருந்தனர். கட்டாய வினா எளிமையானதாக இருந்தது. மெல்ல கற்கும் மாணவருக்கு தேர்ச்சி பெற முடியும். இரண்டு, ஐந்து மதிப்பெண்ணில் வழக்கமாக கணக்குகள் அதிகமாக இருக்கும்; இம்முறை தியரி அதிகமாக கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண் முழுமையாக தெரிந்த வினாக்களாக இருப்பதால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். சென்டமும் பெற முடியும்,' என்றனர்.
வேதியியல் தேர்வு குறித்து மாணவர்கள் கூறியதாவது:
ஏமாற்றம் நிதிஷ்: வினாத்தாளில் எதிர்பார்த்து சென்ற கேள்வி இல்லை. முந்தைய வினாத்தாள், காலாண்டு, அரையாண்டு தேர்வில் இருந்து வினாக்கள் இடம்பெறவில்லை. நீண்ட நேரம் யோசித்து பின் விடையளிக்கும் வகையில் ஐந்து மதிப்பெண் கடினமாக கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண் பரவாயில்லை. தேர்ச்சி பெற அது உதவும்.
தர்ஷனா: முழுமையாக படித்திருந்தால் தான் மதிப்பெண் பெற முடியும். இப்படி வினாத்தாளை எதிர்பார்க்கவில்லை. எப்படியும், 'சென்டம்' வாங்கி விடலாம் என இருந்தேன். ஆனால், 90 - 95 மட்டுமே வாங்க முடியும். ஐந்து மதிப்பெண்ணில் ஒரு கேள்வி எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது புரிந்து கொள்ளவே நேரம் பிடித்தது.
படிக்க வேண்டும் வேதியியல் ஆசிரியர்கள் கூறுகையில், 'ஐந்து மதிப்பெண்ணில் இரண்டு கேள்விகள், மூன்று மதிப்பெண்ணில் மூன்று கேள்விகள் பாடங்களுக்குள் இருந்து புதுமையாக கேட்கப்பட்டுள்ளது. கட்டாய வினா ஏற்கனவே வந்தது. அதுகூட பரவாயில்லை. ஆனால், சென்டம் என்ற இலக்குடன் தேர்வுக்கு வந்தவர்களை சற்று சோதித்து பார்க்கும் வகையில் வினாத்தாள் இடம் பெற்றிருந்தது. நன்கு படித்த மாணவர்கள் மட்டுமே ஐந்து மதிப்பெண் முழுமையாக எழுத முடியும். அட்டை டூ அட்டை படித்தவர் மட்டுமே சென்டம் பெறலாம். ஏற்கனவே படித்திருந்த எதிர்பார்த்த கேள்விகள் இல்லாததால், வினாத்தாள் சவலாக இருந்தது,' என்றனர்.

