/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் இணைப்பு விவகாரம் 'உறக்கம்' கலைந்த மாநகராட்சி
/
மின் இணைப்பு விவகாரம் 'உறக்கம்' கலைந்த மாநகராட்சி
ADDED : ஜூன் 20, 2025 02:25 AM
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் ஒரு கோவில், அதையொட்டி மர அறுவை மில்லும் இருந்தது. இந்த இடத்தில் மாநகராட்சி கமிஷனர் பெயரில் மின் இணைப்பு பயன்பாட்டில் இருந்தது. கடந்த சில மாதம் முன் மின் இணைப்பை இடமாற்றம் செய்ய பாண்டியன் நகர் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதற்கு போலியாக கமிஷனர் பெயரில் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து, கடந்தாண்டு டிச., மாதம் மின் வாரியத்துக்கு புகார் சென்றது. மேலும், மாநகராட்சி அலுவலகத்துக்கும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவும், இந்த மோசடியில் ஈடுபட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, மின் வாரிய ஒப்பந்த பணியாளர் சங்க பொது செயலாளர் சரவணன் புகார் அளித்தார்.
ஆனால், மின் வாரியம் இதுகுறித்து இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அம்மனுவை கிடப்பில் போட்டுள்ளது. புகார் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதோடு சரி. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை. இதேபோல, மாநகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.
தற்போது, நுகர்வோர் அமைப்பு மூலம், நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில், இது குறித்து மீண்டும் மனு அளித்து நடவடிக்கை கோரி வலியுறுத்தப்பட்டது.
அதன்பின், தற்போது, மாநகராட்சி, 2வது மண்டல கமிஷனர் சக்திவேல், மின் வாரியத்துக்கு இது குறித்த நடவடிக்கை விவரங்களை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மின் இணைப்பு பெயர் மாற்ற விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநகராட்சி கமிஷனர் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்த விவகாரத்தில், மாநகராட்சி நிர்வாகம் தற்போது ஏழு மாதங்களுக்குப் பின்னர் 'உறக்கம்' கலைத்துள்ளது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.