/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாமரைக்குளத்தில் காத்திருக்கும் ஆபத்து
/
தாமரைக்குளத்தில் காத்திருக்கும் ஆபத்து
ADDED : அக் 26, 2025 03:10 AM

தாமரைக்குளத்தில் ஆபத்தை உணராமல் மீன் பிடித்தும், குளித்தும் விளையாடும் சிறுவர்கள் பாதுகாப்பு கருதி, கம்பி வேலி அமைக்க கோரிக்கை வலுத்துள்ளது.
அவிநாசி, மங்கலம் ரோட்டில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் வரலாற்று தொடர்புடைய தாமரைக் குளம், 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மற்றும் மழை காரணமாக, சில ஆண்டுகளாக தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையின் காரணமாக தாமரை குளத்திற்கு வரும் நீர் வழித்தடத்தில் மழை நீர் வழிந்து தற்போது படித்துறை வரை நீர் வந்துள்ளது.
பல மாதங்களாக தண்ணீர் நிரம்பி உள்ளதால் குளத்தில் அதிகளவில் மீன்கள், பல வகையான பறவைகள் குளத்தில் உள்ளது. தண்ணீர் நிரம்பியுள்ள குளத்தில் ஆழம் தெரியாமல் ஆபத்தை உணராத சிறுவர்கள் பலர் தினந்தோறும் மீன் பிடிப்பதற்காகவும், நீச்சல் அடித்து பழகுவதற்காகவும் வருகின்றனர். பல மாதங்களாக தண்ணீர் தேங்கி நிற்கும் குளத்தில் அடிப்பகுதியில் வண்டல் மண் சேறும் சகதியுமாக உள்ளதை அறியாமல் விளையாடுகின்றனர். இதனால் சேற்றில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக குளம் காக்கும் அமைப்பினர் கூறுகின்றனர்.
கடந்த, 54 வாரமாக குளம் காக்கும் அமைப்பினர் சார்பில் தாமரைக் குளத்தில் வாரந்தோறும் துாய்மைப்படுத்தும் பணிகள், முள் செடிகள் அகற்றுதல் பிளாஸ்டிக், பாலிதீன் கவர்கள், டம்ளர்கள் போன்ற மக்காத கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் போன்றவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு சில மாதத்துக்கு முன் தாமரைகுளத்தின் கரை பகுதியில் குறிப்பிட்ட துாரம் வரை நாள்தோறும் அவிநாசியில் நடைபயிற்சி செய்பவர்களுக்காக செப்பனிட்டு, நடைபயிற்சிக்கு ஏற்றவாறு சுத்தம் செய்தனர்.
இந்நிலையில், மீன் பிடிக்கவும், நீச்சல் பழகுவதற்கு என வரும் சிறுவர்கள் குளத்தில் இறங்கி விளையாடுவது ஆபத்தை விளைவிக்க கூடும் என்பதால், உடனடியாக குளத்தின் கரை முழுவதும் கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய, நீர்வள ஆதார துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

