/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுால் உற்பத்தி தொழில் சிறக்க 'டைமா' சங்கம் உதயம்!
/
நுால் உற்பத்தி தொழில் சிறக்க 'டைமா' சங்கம் உதயம்!
ADDED : ஜூலை 12, 2025 12:56 AM
திருப்பூர்; நுால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொண்டு, மீண்டும் தொழிலை தலைநிமிர செய்யும் வகையில், திருப்பூர் நுால் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிரடியாக களமிறங்கியுள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழிலில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம், ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை நோக்கி, வேகமாக முன்னேறி வருகிறது. பின்னலாடை தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும், நுால் உற்பத்தியோ அதே வேகத்தில் நடக்கவில்லை.
நுால் உற்பத்தி தொழிலில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும், லாபகரமான தொழிலாக மாற்றவும், திருப்பூர் நுால் உற்பத்தியாளர்கள் சங்கம் (டைமா) உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக உருவாகிய சங்கம், நுால் உற்பத்தி தொழிலை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆலோசித்து வருகிறது.
திருப்பூர் நுால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளாக, நுால் உற்பத்தியாளர்கள் கடும் சவால்களை சந்தித்து வருகிறோம். பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை நிலையாக இல்லாததாலும், மின்கட்டண செலவு அதிகரித்துள்ளதாலும், உற்பத்தி செலவு அபரிமிதமாக உயர்ந்துள்ளது.
உற்பத்தி செலவு உயர்வை காரணம் காட்டி, நுால்விலையை உயர்த்திக்கொள்ளவும் முடியவில்லை. கடந்த, 10 நாட்களில் மட்டும், பஞ்சு விலை, ஒரு கேண்டி (365 கிலோ), 1,800 ரூபாய் உயர்ந்துள்ளது. பஞ்சு விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைக்க, இந்திய பருத்திக்கழகம் ஒப்புழைக்க வேண்டும்.
தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புதுப்பித்தல் செலவுகளுக்கு, செலவு தினமும் அதிகரித்து வருகிறது. உற்பத்தியில் மட்டுமல்லாது, விற்பனையிலும், சவால்கள் அதிகரித்து, மிக சிரமமான சூழலை உருவாக்கியுள்ளது. நுால் உற்பத்தி தொழிலை மீட்டெடுத்து, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரவும், நுாற்பாலை தொழிலை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்துள்ளோம்.
பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நுால் உற்பத்தியை, சீராகவும், தரமாகவும் செய்வதுடன், நியாயமான விலையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வோம். தரமான நுால் வழங்குவது எங்கள் கடமை என்றாலும், அதை வாங்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியம். அதன்படி, நுால் விற்பனையில் நீண்டகால கடனை தவிர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, கடன் நாட்களை இறுதி செய்வதுடன், குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகை செலுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாள் நிலுவையை வசூலிக்கும் வகையில், நுால் உற்பத்தியாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவுகளுக்கு, வாடிக்கையாளர் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.