ஓயாத குப்பை பிரச்னை... தீராத தலைவலி: காற்றில் 'பறந்த' ஷெட்: தவிக்கும் பொதுமக்கள்!
ஓயாத குப்பை பிரச்னை... தீராத தலைவலி: காற்றில் 'பறந்த' ஷெட்: தவிக்கும் பொதுமக்கள்!
UPDATED : மே 19, 2026 07:23 PM
ADDED : மே 19, 2026 07:13 PM

திருப்பூர்: மங்கலம் ஊராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பை மேலாண்மைப் பிரச்னை, தற்போது அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ம
மங்கலம் ஊராட்சியில் குப்பைகளைக் கொட்டுவதற்கோ அல்லது அவற்றை முறைப்படி தரம் பிரிப்பதற்கோ போதிய இடவசதி இல்லை. இதனால், பிரதான சாலையோரங்களிலேயே டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதன் காரணமாக அப்பகுதி முழுதும் கடுமையான துர்நாற்றம் வீசியதோடு, நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், நல்லணை தடுப்பணை அருகே தற்காலிக ஏற்பாடாக இரும்புத் தகடுகளை கொண்டு 'ஷெட்' அமைத்து, அதில் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 'ஷெட்' முற்றிலும் உடைந்து, சிதறியுள்ளது. தற்போது உடைந்த ஷெட்டின் பாகங்களும், குப்பைகளும் ஒன்றாகக் கலந்து, அதே இடத்தில் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.
மாவட்டம் தழுவிய பிரச்னை
இது, வெறும் மங்கலம் ஊராட்சியின் பிரச்னை மட்டுமல்ல; மாவட்டம் முழுவதும் பெரும்பாலான ஊராட்சிகளில் இதே நிலைதான் நீடிக்கிறது. குப்பை கிடங்குகள் அமைப்பதற்கான அரசு நிலங்கள் போதிய அளவில் ஒதுக்கப்படவில்லை. கிராமப்புறங்களின் நகரமயமாக்கல் வேகமெடுத்துள்ளதால், அன்றாடம் சேரும் கழிவுகளின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என வீடுகளிலேயே தரம் பிரிக்கும் நடைமுறை இன்னும் முழுமையான இலக்கை எட்டவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் முதன்மை பணியாக, மாவட்டம் தழுவிய பிரச்னையாக உள்ளத குப்பை மேலாண்மை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
