ADDED : ஜன 14, 2025 11:44 PM
திருப்பூர்; மதுக்கடைகளால் அன்றாடம் குடும்பங்களில் பிரச்னை, அடிதடி, கொலை போன்றவை அரங்கேறி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், 'ஹாலா பிளாக்' நிறுவனத்தில் தங்கியிருந்த, இரு தொழிலாளிகள் மது அருந்தினர். நள்ளிரவில் போதையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், இரும்பு கம்பியால் தாக்கி கொண்டதில் இறுதியில் கொலையில் முடிந்தது. 'மது' என்ற கொடிய அரக்கனால், அன்றாடம் மாநகரம், புறநகர் பகுதியில் ஏதாவது அடிதடி, வேலைக்கு சரியாக செல்லாமல் குடும்ப பிரச்னை என, ஏதாவது ஒன்று அரங்கேறி வருகிறது.
மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என, அனைத்து தரப்பும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் கட்சிகள் இதுதொடர்பாக வாக்குறுதி கொடுக்கின்றனர். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின், இப்பிரச்னையை கண்டு கொள்வதில்லை என மக்கள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்பூர் மாநகரத்தை பொறுத்தவரை, தொழில்துறையினர் தரப்பில், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகாமல், வேலைக்கு சரியாக வர வேண்டும். சம்பள பணத்தை குடும்ப தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், தொழிலாளிகள் பலரும் சம்பள வாங்கிய உடன், மதுக்கடைக்கு சென்று பணத்தை செலவழித்து விட்டு, குடும்பத்தில் உள்ளவர்களையும் சிரமப்படுத்துகின்றனர்.
இந்த மதுக்கடைகளால் சம்பந்தப்பட்ட குடும்பம், வேலை ஆட்கள் இழப்பு என, தொழில்துறையினரும் கடுமையாக பாதிக்கின்றனர். கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, இளைய சமுதாயத்தின் மதுவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர் என்பது ஒரு கொடுமையான விஷயம்.
மேலும், குடியிருப்பு பகுதி, மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என, பல இடங்களில் பொதுமக்கள் ஆவேசமடைந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். பிரச்னைக்கு ஆளாகும் கடைகளை இடமாற்றுகிறோம், அகற்றுகிறோம் என்று 'டாஸ்மாக்' அதிகாரிகள் கூறினாலும், அவர்களின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக மட்டுமே உள்ளது. கூடுதலான கடைகளை திறப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, உணர்வுகளுக்கு மதிப்பளித்து மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, ஒரு கட்டத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதே, பொதுமக்களின் ஒருமித்த கருத்து.