/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்னும் 'பறக்குது' கொடி! முழுமையாக அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
/
இன்னும் 'பறக்குது' கொடி! முழுமையாக அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
இன்னும் 'பறக்குது' கொடி! முழுமையாக அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
இன்னும் 'பறக்குது' கொடி! முழுமையாக அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
ADDED : ஜூலை 04, 2025 12:56 AM

திருப்பூர்; கோர்ட் உத்தரவிட்டும் கூட, திருப்பூரில், பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை.
தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசின் பிற துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள்; ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடி கம்பங்கள், ஏப்., 28க்குள் அகற்றப்பட வேண்டும்' என, கடந்த ஜனவரியில், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மாவட்ட வாரியாக கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வரும் பணி, மாவட்ட வாரியாக எத்தனை சதவீதம் கொடி கம்பங்கள் அகற்றும் பணி நடந்திருக்கிறது ஐகோர்ட் உன்னிப்பாக கவனித்து வருகிறது.அரியலுார், செங்கல்பட்டு, கரூர், கடலுார், நாகை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள், 100 சதவீதம் அகற்றப்பட்டுள்ளன.
கோவை, வேலுார், திருவாரூர், சேலம் உட்பட, 11 மாவட்டங்களில், 90 சதவீதத்துக்கு மேல் அகற்றப்பட்டுள்ளன. ஏழு மாவட்டங்களில், 50 முதல் 90 சதவீதம் வரை கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன எனவும், ஐகோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது.திருப்பூரில், நுாறு சதவீதம் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதாக, புள்ளிவிபரம் இல்லை.
திருப்பூர் மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை, 647 கொடி கம்பங்கள் அகற்றப்பட வேண்டியிருக்கிறது, என மாநகராட்சி நிர்வாகம் புள்ளிவிபரம் அளிக்கும் நிலையில், 95 சதவீதம் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது; மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்துக்கட்சிகள் சார்பில் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ள நிலையில், அவற்றை அகற்றுவது தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
'திருப்பூர் நகரம், அவிநாசி, காங்கயம், பல்லடம் வட்டாரங்களை உள்ளடக்கிய, திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலை எல்லைக்குள், அகற்றப்பட வேண்டிய பட்டியலில் இருந்த, 68 கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டு விட்டன' என, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவை தவிர நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள கொடி கம்பங்கள், முழு அளவில் அகற்றப்பட்டதாக தெரியவில்லை.இந்நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை, நுாறு சதவீதம் அகற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
--மேலும் படங்கள் பக்கம் 4