/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரக்கன்று நடவுப்பணி வனத்துறையினர் தீவிரம்
/
மரக்கன்று நடவுப்பணி வனத்துறையினர் தீவிரம்
ADDED : அக் 17, 2024 09:37 PM
திருப்பூர், :தமிழ்நாடு உயிர் பன்முகத் தன்மை மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, வினியோகிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.'வனப்பரப்பில், 33 சதவீதம் எட்டப்பட வேண்டும்' என்ற நோக்கில், தமிழ்நாடு உயிர் பன்முகத் தன்மை மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் மரக்கன்று நடவு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்கென, 'அந்தந்த பகுதிகளின் மண் வளம், நில அமைப்புக்கேற்ற மரக்கன்றுகள், அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறை நாற்றுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக நடவு செய்து தரப்படும்' என, வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.கடந்த, ஜூலை மாதம் இத்திட்டம் நடைமுறைக்கு வர வேண்டிய நிலையில், எதிர்பார்த்த பருவமழை இல்லாததால், பணியில் தொய்வு தென்பட்டது. தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மரக்கன்று வழங்கும் திட்டத்தை வனத்துறை வேகப்படுத்தியுள்ளது.வனத்துறை சார்பில் அந்தந்த பகுதிக்கேற்ற மரக்கன்றுகள், வனத்துறை நாற்றுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன; மரக்கன்றுகள் நட விருப்பமுள்ளவர்களின் இடத்தில் இலவசமாகவே நடவு செய்தும் தரப்படுகிறது.
'இந்த வாய்ப்பை பொதுமக்கள், விவசாயிகள், நிறுவனத்தினர் மற்றும் அமைப்பினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக, பசுமைப்பரப்பு அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயரும்; பல்லுயிர் பெருக்கம் ஏற்படும்' என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.