/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூச்சிகளுக்கு தெரிந்த 'எதிர்காலம்'
/
பூச்சிகளுக்கு தெரிந்த 'எதிர்காலம்'
ADDED : ஜன 06, 2024 11:52 PM

'திடீரென வீடுகளின் சுவரில், நுாற்றுக்கணக்கில் ஊர்ந்து செல்கின்றன ஒரு வகை பூச்சிகள்; வீட்டின் மொட்டை மாடி முழுக்க அவை பரவுகின்றன. வீட்டில் வசிப்பவர்களுக்கோ, 'இது என்ன வகை பூச்சி? இதுவரை இப்படியொரு பூச்சியை பார்த்ததே இல்லையே?' என்ற வியப்பு. அந்த பூச்சிகளை விரட்ட முயற்சிக்கின்றனர்; அவை, அங்கிருந்து நகரவே இல்லை...!
அடுத்த இரண்டாவது நாள், வரலாறு காணாத பெருமழை கொட்டி தீர்க்கிறது; வீடுகளுக்குள் வெள்ளம் திரண்டு வர, மொட்டை மாடியில் அடைக்கலம் தேடுகின்றனர் மக்கள்; அங்கே, அந்த பூச்சியினங்களும் கண்ணில் பட்டன. 'அந்த பூச்சி எந்தளவு உயரத்துக்கு ஏறியதோ, அந்தளவுக்கு மழை வெள்ளம் சூழ்ந்தது' என்பது தான், குடியிருப்புவாசிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சிலர், 'உயிர் பிழைத்தால் போதும் என, தங்கள் உடமைகளை விட்டு, வீடுகளை விட்டு வெளியேறி, முகாம்களில் தஞ்சமடைகின்றனர்.
இது ஏதோ கதையல்ல. சமீபத்தில், பெய்த வரலாறு காணாத மழையில், நெல்லை, துாத்துக்குடி மாவட்ட மக்களில் சிலர் எதிர்கொண்ட அனுபவம்.
இந்த அனுபவத்தை நெல்லையைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவத்திடம் பகிர, பேரிடர் தொடர்பான பழைய நிகழ்வுகளை புத்தகங்கள், இணைய பக்கங்களில் புரட்டுகிறார் சதாசிவம். குறிப்பில் கண்ட நிகழ்வுகளை, நம்மிடம் பகிர்ந்தார்.
அடடே... தகவல்
புதர்மண்டிக்கிடந்த இடங்கள் உள்ளிட்ட தாழ்வான, மறைவான இடங்களில் வசித்த பூச்சியினங்கள், பெரும் வெள்ளம் வரப்போகிறது என்பது இரு நாட்களுக்கு முன்பே உணர்ந்திருக்கின்றன; அந்த பூச்சிகள் எந்தளவு உயரத்தில் இருந்ததோ, அந்தளவு உயரத்துக்கு ஓரடிக்கு கீழ் வரை மழை நீர் சூழ்ந்தது என்பதே, இதற்கு சாட்சி.
கடந்த, 2004 சுனாமியின் போது, அந்தமானில் வாழ்ந்த பழங்குடிகள், அங்குள்ள ஆறுகளில் இருந்து இரு நாட்களுக்கு முன்பே, சில பூச்சிகள் வெளியேறுவதை அறிந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, பூச்சிகளை பின்தொடர்ந்து, மேடான பகுதியில் தங்கி, தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில் தான் நெல்லை, துாத்துக்குடியில் தென்பட்ட விதைப்பூச்சிகள், பேரிடர் பாதிப்பு வருவதை முன்கூட்டியே உணர்ந்திருக்கின்றன.
சில நாட்களுக்கு முன் 'காடறிதல்' பயணத்தில், காட்டாற்றில் எங்கள் குழுவினர் குளித்துக் கொண்டிருந்தனர். தெளிந்திருந்த நீர் கொஞ்சம், கொஞ்சமாக கலங்கி, அதில் இலை, சருகுகள் அதிகளவில் மிதந்து வருவதை கண்டோம்; சுதாரித்து கரையேறிவிட்டோம். சில நிமிடங்களில் காட்டாற்றில் கரை மீறும் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்தது.
சுருங்கச் சொல்லப்போனால், அறிவியலும், தொழில்நுட்பமும் சொல்லும் வானிலை அறிக்கையை, முன்கூட்டியே உணரும் ஆற்றில் இயற்கையாகவே சில விலங்கு, பூச்சியினங்களுக்கு உண்டு. எனவே, இயற்கையை படிக்க வேண்டும். வானிலை அறிக்கையை கவனித்து, ஆராய்ச்சியாளர்கள் விடுக்கும் செயதிகள், அறிவுரைகளை கூர்ந்த கவனித்து, அது சார்ந்து, செடி, கொடி, பறவை, விலங்கினங்கள் சார்ந்து நிகழும் இயற்கை மாற்றங்களை கவனிக்க வேண்டும்; உணர வேண்டும். அப்போது, இயற்கை இன்னல்களில் இருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ள முடியும்.
கடந்த, 2004 சுனாமியின்
போது, அந்தமானில் வாழ்ந்த
பழங்குடிகள், இரு நாட்களுக்கு முன்பே, சில பூச்சிகள்
வெளியேறுவதை அறிந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, பூச்சிகளை பின் தொடர்ந்து மேடான
பகுதியில் தங்கி, தற்காத்து
கொண்டனர்