/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டும் விவகாரம் விஸ்வரூபம்: மாநகராட்சியுடன் மல்லுக்கட்டும் மக்கள்: விடியவிடிய போராட்டம்!
/
குப்பை கொட்டும் விவகாரம் விஸ்வரூபம்: மாநகராட்சியுடன் மல்லுக்கட்டும் மக்கள்: விடியவிடிய போராட்டம்!
குப்பை கொட்டும் விவகாரம் விஸ்வரூபம்: மாநகராட்சியுடன் மல்லுக்கட்டும் மக்கள்: விடியவிடிய போராட்டம்!
குப்பை கொட்டும் விவகாரம் விஸ்வரூபம்: மாநகராட்சியுடன் மல்லுக்கட்டும் மக்கள்: விடியவிடிய போராட்டம்!
ADDED : நவ 27, 2025 05:12 AM

பல்லடம்: சின்னக்காளிபாளையம் கிராமத்தில், குப்பை விவகாரம் தொடர்பான மக்கள் போராட்டம் வீரியமாகி வரும் நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.
திருப்பூர் அருகே, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சி பகுதிகளின் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம், வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானதால், பொதுமக்கள், காத்திருப்பு போராட்டம் துவக்கினர். ஆனால், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிடாமல், இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, ஆண்கள் மட்டுமே இரவிலும் போராட்டத்தை தொடர்வது என்றும், பெண்கள் மறுநாள் வந்தால் போதும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்ட பந்தலில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ஜெனரேட்டர் மற்றும் மின் விளக்கு இணைப்பை துண்டித்தனர். இதில், போலீசாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், மீண்டும் போராட்ட பந்தலுக்கு வந்து, இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசார் மின் இணைப்பை துண்டித்தால், போராட்ட பந்தலில் இருள் சூழந்தது. இதனால், இரு சக்கர வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் இரவு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நேற்று இரவும் தொடர்ந்தது.
இது குறித்து, போராட்ட குழுவினர் கூறியதாவது:
கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருவது தமிழக முதல்வரின் கவனத்துக்கு செல்லவில்லையா? பசுமையாகவும், விவசாயம் செழித்து வரும் எங்கள் கிராமத்தில் குப்பைகளை கொட்டி விவசாயத்தையும், கிராமத்தையும் அழிக்க நினைப்பதுதான் தமிழக அரசின் லட்சியமா? கலெக்டர், அமைச்சர், மேயர், எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலரையும் சந்தித்து மனு கொடுத்து எதுவும் நடக்கவில்லை.
எனவே, ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை போய்விட்டது. கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். அமைதியாக போராடுவதும், ஆக்ரோஷத்துடன் போராடுவதும் அரசின் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

