ADDED : நவ 09, 2025 12:08 AM

பல்லடம்: பல்லடம் -- செட்டிபாளையம் ரோடு, கொச்சி செல்லும் இணைப்புச் சாலையை இணைக்கிறது. கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால், சரக்கு போக்குவரத்துக்கு இந்த வழித்தடம் பிரதானமாக உள்ளது. வாகன போக்குவரத்து நிறைந்த இந்த நெடுஞ்சாலை, கடந்த நான்கு ஆண்டுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது.
பல்லடம் -- பணிக்கம்பட்டி பிரிவு வரையும்; முத்தாண்டிபாளையம் பிரிவு முதல் கரடிவாவி வரையும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கு இடையே உள்ள கே. அய்யம்பாளையம் கிராமம் வழியாக செல்லும் நெடுஞ்சாலை புதுப்பிக்கப்படாமலும், விரிவுபடுத்தாமலும் கைவிடப்பட்டது. இரண்டாம் கட்ட பணியின் போது ரோடு புதுப்பிக்கப்படும் என, அப்போதைய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்
ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் ரோடு புதுப்பிக்கப்படவில்லை. குறிப்பாக, கே. அய்யம்பாளையம்- முத்தாண்டிபாளையம் பிரிவு வரை, ஏறத்தாழ, 2.5 கி.மீ., துாரம் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேண்டேஜ் போடுவதைப் போல், சேதமடைந்த ரோடு முழுவதும் பேண்டேஜ் போடப்பட்டுள்ளன. இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். மேடு - பள்ளங்கள், பிளவுகளுடன் ரோடு இருப்பதால், வாகனங்கள் அதன் போக்கில் இழுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சேதமடைந்த ரோட்டுக்கு இனியும் 'பேண்டேஜ்' போடாமல், புதிதாக ரோடு அமைக்க வேண்டும்.

