
திருப்பூர்; கார்த்திகை தீபத்திருவிழாவான நேற்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், மஹா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது; வீடு, தொழிற்சாலை, கடைகளில், அகல்விளக்கு ஏற்றி வைத்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, 6:00 மணிக்கு திருவண்ணாமலையின் மீது மஹா தீபம் ஏற்றப்பட்டது. மஹாதீபம் ஏற்றப்பட்டதும், கோவில்கள் மற்றும் இல்லங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன.
திருப்பூர் மாநகரம் தீப ஒளியில் ஒளிர்ந்தது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலை, 4:00 மணிக்கு, பிரதோஷ பூஜையும், 5:00 மணிக்கு கார்த் திகை நட்சத்திர முருகர் வழிபாடும் நடந்தது. அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
மண் பானையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. கோவிலை சுற்றிலும், பரணி தீபம் ஏற்றி வைக்கப்பட்டு, சிவபுராணத்தை பக்தர்கள் பாராயணம் செய்தனர். கோவில் நிர்வாகிகள், திருவண்ணாமலை தீபத்தை எடுத்து, 'அண்ணாமலையாருக்கு அரோகரா... அரோகரா...' கோஷத்துடன் கோவிலை சுற்றி வந்து, கோவில் முன் உள்ள தீப ஸ்தம்பத்தின் மீது ஏற்றினர். அருகிலேயே, தென்னை ஓலையை கொண்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
கொங்கணகிரி முருகன் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில் என, அனைத்து கோவில்களிலும், கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
எங்கும் ஒளி வெள்ளம்
பின்னலாடை உள்ளிட்ட தொழிற்சாலைகள், வீடுகள், கடைகள், நிறுவனங்களில், மாலையில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. வீட்டு வாசலில் கோலமிட்டு, குத்து விளக்கு ஏற்றி வைத்து சுற்றிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டனர்.வீடு, கடைகளின் வாசல், வீட்டின் மாடியில் உள்ள கைப்பிடி சுவர், தெருக்குழாய் அருகே, அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர். ஒரே நேரத்தில், அனைவரும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்ததால், குடியிருப்பு பகுதிகள் தீப ஒளியில் ஜொலித்தன.
நாளை விஷ்ணு தீபம்
திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், அவிநாசி, கரிவரதராஜ பெருமாள் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில், நாளை (15ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு விஷ்ணு தீபத்திருவிழா நடக்க உள்ளதாக, பட்டாச்சாரியார்கள் தெரிவித்தனர்.