UPDATED : ஏப் 21, 2026 11:35 AM
ADDED : ஏப் 20, 2026 09:09 PM

திருப்பூர்:தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 21 மாலையுடன் ஓய்கிறது.
கடந்த மார்ச் 15-ம் தேதி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அம்மாதம் 30 முதல் ஏப். 6 வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. ஏப்ரல் 9-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 116 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த ஏப். 10- முதல் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தைத் துவங்கினர்.
தி.மு.க. கூட்டணி; அ.தி.மு.க. கூட்டணி; த.வெ.க.; நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு வேட்பாளர்கள் தீவிரமாகச் சுழன்று பணியாற்றினர்.
தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் இருசக்கர வாகனங்களிலும், நடைப்பயணமாகவும் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர்.
வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்பது விதியாகும். இன்று மாலை 6:00 மணியுடன் அனைத்து விதமான வாகனப் பிரசாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நிறைவுக்கு வருகின்றன. கடந்த பத்து நாட்களாகச் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள், இன்றுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்கின்றனர். ஆம். 'மைக்' சத்தம் ஓய்கிறது.
