
திருப்பூர்;திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறுவதற்காக வந்தார், வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்லம்மாள். அருகில், பச்சிளங்குழந்தையுடன் 19 வயது பெண்; 'அம்மா... வயிறு வலிக்குது... ஒரே ஒரு நிமிஷம் குழந்தையப் பாத்துக்கிறீங்களா' என்று கேட்கிறார் பெண்.
'அதுக்கென்ன தாயீ' என செல்லம்மாள், குழந்தையை வாங்கி, ஆரத்தழுவி, தன் மடியில் உறங்க வைத்திருந்தார். இரண்டு மணி நேரமாகியும், குழந்தையை தேடி பெண் வரவில்லை. திகைத்தார்; அருகில் உள்ளவர்கள் போலீசுக்கு போன் செய்தனர்.
தெற்கு இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், எஸ்.ஐ., பிச்சையா, பஸ் ஸ்டாண்ட் வந்தனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
குழந்தைகளுக்கான பிரத்யேக, 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பச்சிளம் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
'ஆண் குழந்தை பிறந்து, 15 முதல், 20 நாட்கள் தான் இருக்கும். குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. தாய்ப்பால் வங்கி மூலம், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வருகிறோம். 24 மணி நேரமும் குழந்தையை கண்காணித்து வருகிறோம்,' என்று அரசு மருத்துவக்கல்லுாரி குழந்தைகள் நல டாக்டர் செந்தில்குமார் கூறினார்.