/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆக்கிரமிப்பு அகற்றாத அவலம் தொடர்கிறது'
/
'ஆக்கிரமிப்பு அகற்றாத அவலம் தொடர்கிறது'
ADDED : ஏப் 28, 2025 04:16 AM
திருப்பூர்: திருப்பூர் பகுதியில் காணப்படும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து சாலை பாதுகாப்புகமிட்டி கூட்டத்தில் பிரச்னையை கிளப்ப சமூக ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன. அனைத்து பிரதான ரோடுகள் மட்டுமில்லாமல், குறுக்கு ரோடுகள், வீதிகள் என எங்கும் ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. பிளாட்பாரக் கடைகள், தள்ளு வண்டி கடைகள் ரோடுகளில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான வர்த்தகர்கள் தங்கள் கடைகள் முன்புறம் பிளாட்பாரம் வரை பொருட்கள், போர்டுகள் வைத்தும் ஆக்கிரமித்துள்ளனர்.பிரதான ரோடுகளில் நிறுத்தப்படும் தள்ளு வண்டிகள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றில் பொருள் வாங்குவோர் தங்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி, போக்குவரத்து நெரிசலையும், விபத்து களையும் ஏற்படுத்துகின்றனர்.
அதே போல் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலும், பயணிகளுக்கு இடையூறாக கடைக்காரர்கள் பொருட்களை பரப்பி வைத்து அவதி ஏற்படுத்துகின்றனர்.
''நகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி, ரோட்டோர ஆக்கிரமிப்புகள் குறித்து தொடர்ந்து அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்தப் பயனும் இல்லாத நிலை உள்ளது.
என்ன காரணத்துக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர் என்பது புதிராக உள்ளது.
வரும் 29ம் தேதி (நாளை) கலெக்டர் தலைமையில் நடைபெறும் சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து பேசி, உரியவகையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

