/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆன்மிக அருள் நிறைந்த ஆடி மாதம் திருக்கோவில்; திருப்படிகளை நாடிச் செல்லுமே பக்தர்கள் பாதம்
/
ஆன்மிக அருள் நிறைந்த ஆடி மாதம் திருக்கோவில்; திருப்படிகளை நாடிச் செல்லுமே பக்தர்கள் பாதம்
ஆன்மிக அருள் நிறைந்த ஆடி மாதம் திருக்கோவில்; திருப்படிகளை நாடிச் செல்லுமே பக்தர்கள் பாதம்
ஆன்மிக அருள் நிறைந்த ஆடி மாதம் திருக்கோவில்; திருப்படிகளை நாடிச் செல்லுமே பக்தர்கள் பாதம்
ADDED : ஜூலை 18, 2025 11:38 PM
திருப்பூர்; நாள், நட்சத்திரம், திதி என, நாட்களும், அற்புதமான பக்தியும், ஆன்மிகமும் பொருந்திய அசத்தலான மாதம் ஆடிமாதம். ஆடிமாத பிறப்பை, பல்வேறு மாவட்ட மக்கள் தேங்காய் சுடும் நிகழ்ச்சியுடன் துவக்குகின்றர். பொன் மாதம் எனப்படும் ஆடியில்தான், சுமங்கலி பெண்கள், கணவர் நலன் வேண்டி விரதம் இருக்கின்றனர். ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. '
ஆடி மாதத்தில் வரும் விசேஷங்களின் தொகுப்பு:
தட்சிணாயனம்
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் காலம், தட்சிணாயனம் எனப்படுகிறது. ஆடி மாதம் துவங்கி மார்கழி வரையில், தட்சிணாயன காலம்; இக்காலம் தேவாதி தேவர்களுக்கு இரவு பொழுதாக கருதப்படுகிறது. இதனாலும், இந்த மாதம் சிறப்பு பெறுகிறது.
வெள்ளிக்கிழமை
ஆடி வெள்ளி என்றாலே, மாங்கல்ய பலன் வேண்டி சுமங்கலி பெண்கள் விரதம் இருப்பது தான் நினைவுக்கு வருகிறது. சிலர் பார்வதி அம்மனுக்கும், சிலர் மகாலட்சுமி தாயாருக்கும் சிறப்பு வழிபாடு நடத்தி, விரத நோன்பை கடைபிடித்து வருகின்றனர். திருவிளக்கு பூஜை நடத்தி, பஜனை பாடப்படுகிறது. திருப்பூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள் ஒவ்வொன்றும், விழாக்கோலம் பூண்டுள்ளன.
ஆடி அமாவாசை
மாதம்தோறும் அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை தான் தலையாயது என்கின்றனர் சிவாச்சார்யார்கள். அந்நாளில், முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறப்பு. அதேபோல், புனித தீர்த்தங்களில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை மக்கள் வழக்கமாக கெண்டுள்ளனர். (ஜூலை 24ம் தேதி)
ஆடிக்கிருத்திகை
ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திர நாள், முருகப்பெருமான் அறுபடை வீடுகளிலும், முருகப்பெருமானுக்கு விழா எடுத்து கொண்டாடுவது வழக்கம். கார்த்திகை பெண்கள் வளர்த்ததால், கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உரிய நாளாக கருதி, ஆடிக்கிருத்திகையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. (ஜூலை 20ம் தேதி)
ஆடிப்பூரம்
ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரநாள், அம்மனுக்கு உகந்த நாள் மட்டுமல்ல; ஆண்டாள் அவதரித்த தினம். உலக மக்களை காக்க, சக்தியாக உருவெடுத்தத ஆடிப்பூரம்; அந்நாளில், அம்மன் கோவில்களில் கண்ணாடி வளையல் அலங்கார பூஜை நடப்பது சிறப்பு. ஆண்டாள் நாச்சியாருக்கான ஆடிப்பூரம், பெருமாள் கோவில்களலும் கொண்டாடப்படுகிறது. (ஜூலை 28ம் தேதி)
ஆடிப்பெருக்கு
பொங்கிவரும் காவிரியை வரவேற்கும் நாளாக, ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது; தண்ணீருக்கு நன்றி கூறும் நாளாகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. புதுமண தம்பதியர் உள்ள குடும்பத்தினர், ஆற்றங்கரையில் படையலிட்ட வழிபடுவர். கொங்கு மண்டலத்தில், ஆடிப்பெருக்கு நாள், அறுசுவை உணவு, வடை, பாயசம் விருந்துடன், துாரியாடி (ஊஞ்சல்) கொண்டாடப்படுகிறது. (ஆக., 3ம் தேதி)
ஆடித்தபசு
ஆடிமாதம் பவுர்ணமி நாளில், சங்கரன்கோவிலில் நடக்கும் விழாவே ஆடித்தபசு;பார்வதி தேவி, சிவபெருமானை அடைய, கடுமையான தவம் செய்த நாளே ஆடித்தபசு என்கின்றனர். பார்வதிக்கு, சிவபெருமான், சங்கரநாராயணராக காட்சி கொடுத்ததால், சங்கரன்கோவிலில், ஆடித்தபசு விழா பிரசித்தி பெற்றது. (ஆக., 8ம் தேதி)
கருடபஞ்சமி
ஆடிமாத வளர்பிறை பஞ்சமி திதி, கருட பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் கருடபகவான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. இந்நாளில், கருடனை வழிபடுவதன் மூலமாக, பலம், அறிவு, நீளாயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். (ஜூலை, 29ம் தேதி)
ஆவணிக்கு முன்பு வரும் ஆடி மாதம், நாள், நட்சத்திரம், திதி என, ஒவ்வொரு அங்கத்திலும் சிறப்பு பெற்ற மாதம். ஆடி வெள்ளி வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. நேற்று துவங்கி, ஐந்து வெள்ளிக்கிழமைகள் அமைந்துள்ளது இந்தாண்டுக்குரிய சிறப்பு.
ஆவணிக்கு முன்பு வரும் ஆடி மாதம், நாள், நட்சத்திரம், திதி என, ஒவ்வொரு அங்கத்திலும் சிறப்பு பெற்ற மாதம். ஆடி வெள்ளி வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. நேற்று துவங்கி, ஐந்து வெள்ளிக்கிழமைகள் அமைந்துள்ளது இந்தாண்டுக்குரிய சிறப்பு.