UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:36 PM

திருப்பூர்: ''தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம்'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப்பொதுச்செயலாளர் திருக்குமரன் வலியுறுத்தினார்.
திருப்பூர் திறன்மிகு ஏற்றுமதி நிறுவன ஊழியர் மற்றும் அலுவலர் சங்கம் (டீசா) சார்பில், தொழிற்சாலைகளுக்கான தொழில்நுட்ப அறிவு பகிர்வு நிகழ்ச்சி, சுபாஸ் ஸ்கில்ஸ் அகாடமியில் நேற்று நடந்தது.
'டீசா' நிறுவனர் சுரேஷ்பாபு, 'வேல்யூ கிராப்ட் சொல்யூஷன்' நிறுவன பயிற்சியாளர் பிரிவினர் முன்னிலை வகித்தனர். தொழிற்சாலைகளின் செயல்திறனை மேம்படுத்தும் நடைமுறைகள், தொழில்துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், பொறியியல் கட்டமைப்பு, 'லீன்', '5 எஸ்', பிராசசிங் மேலாண்மை, உற்பத்தி மற்றும் நிர்வாகம் குறித்து விளக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன், தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பேசினார். உற்பத்தித் திறன் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துதல், நிலையான செயல்திறன் கட்டமைப்பை உருவாக்குதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு, அவற்றை நடைமுறையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பங்கேற்றவர்களுக்கு விளக்கப்பட்டது.
'டீசா' அலுவலகத்தில் தொழில்நுட்ப பகிர்வுக்கான நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப் பொதுச்செயலாளர் திருக்குமரன் பங்கேற்றார்.
