/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி புதிய அலுவலகம் ரூ.46.8 கோடியில் அமைகிறது
/
மாநகராட்சி புதிய அலுவலகம் ரூ.46.8 கோடியில் அமைகிறது
மாநகராட்சி புதிய அலுவலகம் ரூ.46.8 கோடியில் அமைகிறது
மாநகராட்சி புதிய அலுவலகம் ரூ.46.8 கோடியில் அமைகிறது
ADDED : ஆக 11, 2025 11:40 PM

திருப்பூர்; திருப்பூரில் 46.80 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி மைய அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது.
திருப்பூர் நகராட்சியாக இருந்தபோது, 52 வார்டுகளுடன் செயல்பட்டு வந்தது. கடந்த 2009ல், 60 வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் நடைபெறும் மைய அலுவலகம், துவக்க காலம் முதல், மங்கலம் ரோட்டில் உள்ள வளாகத்தில் செயல்படுகிறது. இது குறுகலான இடமாக உள்ளது.
கடந்தாண்டு, மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டது; இரு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்து, 85 வார்டுகளுடன் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதனால், நிர்வாக ரீதியாக அனைத்து தேவைகளும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
புதிய கட்டடம் கட்ட முடிவு செய்து, தாராபுரம் ரோட்டில், முன்னர் அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு இயங்கி வந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. மாநகராட்சிக்குச் சொந்தமான 3.32 ஏக்கர் பரப்பிலான இந்த இடம் தேர்வு செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஜன. மாதம், 46.80 கோடி ரூபாய் நிதியை, நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்ட அனுமதி அளித்தது.
நேற்று முதல்வர் ஸ்டாலின் புதிய வளாகம் கட்டுமானப் பணிக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். சில மாதம் முன்னரே இந்த வளாகத்தில் செயல்பட்ட பிரிவுகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு, பழைய கட்டடங்கள் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
எப்படி இருக்கும்? புதிய மாநகராட்சி அலுவலக வளாகம் ஏறத்தாழ ஒரு லட்சம் சதுரடி பரப்பில், 3 தளங்களுடன் அமைகிறது. மேயர், துணை மேயர் அறைகள்; மன்ற கூட்ட அரங்கம்; குழுக்களுக்கான அறைகள்; ஆலோசனை அரங்கு ஆகியன அமையவுள்ளன.
மேலும், கமிஷனர் அறை, துணை மற்றும் பிரிவு வாரியான உதவி கமிஷனர்களுக்கான அறைகள், ஆலோசனைக்கூட்ட அரங்கம், பார்வையாளர் அறை, தள வாரியாக கழிப்பிட வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, சாய்வு தளம், லிப்ட், வரி வசூல் மையம், அலுவலக வாகனங்கள், பார்வையாளர் வாகனங்களுக்கான பார்க்கிங் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகள் இடம்பெறும்.