/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுத்தவர் காசில் 'ஆட்டம்' போட்டு அகப்பட்ட வாலிபர்! பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டியதின் 'பலே' பின்னணி
/
அடுத்தவர் காசில் 'ஆட்டம்' போட்டு அகப்பட்ட வாலிபர்! பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டியதின் 'பலே' பின்னணி
அடுத்தவர் காசில் 'ஆட்டம்' போட்டு அகப்பட்ட வாலிபர்! பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டியதின் 'பலே' பின்னணி
அடுத்தவர் காசில் 'ஆட்டம்' போட்டு அகப்பட்ட வாலிபர்! பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டியதின் 'பலே' பின்னணி
ADDED : ஜன 06, 2024 11:14 PM
திருப்பூர்:திருப்பூர் நகை அடகு கடையில் வேலை செய்த வாலிபர், மறு அடகு, போலி ரசீது தயாரித்தும் பல லட்சம் ரூபாயை சுருட்டி, 'உல்லாச' வாழ்க்கை வாழ்ந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறையை சேர்ந்தவர் சுரேஷ்பாண்டியன், 44. இவர் வால்பாறை, பொள்ளாச்சி, பழநி, சத்திரப்பட்டி, திருப்பூர் ஆகிய இடங்களில் 'பழனியப்பா பைனான்ஸ்' என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
அதில், திருப்பூரில், கரட்டாங்காடு, ராக்கியாபாளையம், பி.என்., ரோடு ஆகிய பகுதியில், நான்கு கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், கரட்டாங்காடு, ராக்கியாபாளையம் ஆகிய கடையில் வேலை செய்து வந்த பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார், 23, மேலாளர் கோபிநாத், 32, உதவியாளர் பிரதீப், 27 மற்றும் அருண்குமாரின் நண்பர் சக்திவேல், 30 ஆகியோர் கடந்த, 2019 ம் ஆண்டு முதல் கடையின் உரிமையாளருக்கு தெரியாமல் கடையில் கையாடலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், நகைகளை அடகு வைத்த மாதிரி கணக்கு காட்டி போலியான ரசீதுகள் மூலம் கடையில் இருந்த பணத்தை எடுத்தும், அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை வெளியில் மறு அடகு வைத்து பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இவ்வாறு இரு கடைகளில் சேர்ந்து, 5 கிலோ நகையை மோசடி செய்தது தெரிந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, 1.5 கிலோ நகைகளை இதுவரை மீட்டுள்ளனர்.
மது... மாதுவுடன் சொகுசு வாழ்க்கை
போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட, நான்கு பேரில் அருண்குமார், குடும்ப சூழல் காரணமாக, பத்தாம் வகுப்பு முடித்தவுடன் நகை அடகு கடைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். கோபிநாத் என்பவர் கடந்த, 17 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த, நான்கு ஆண்டுகளாக, அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு கையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
மறு அடகு வைக்கப்படும் நகைகளை, சக்திவேல் என்பவர் மூலமாக வெளியில் விற்றும், அடகு வைத்தும் பணத்தை பெற்றுள்ளனர். கடையில் உரிமையாளர் ஆய்வு மேற்கொள்ளும் போது, இரு கடைகளில் இருந்து நகைகளை மாற்றி வைத்து தப்பித்து வந்துள்ளனர்.
சில நேரங்களில், சேலத்தில் உள்ள கிளையில் வேலை செய்யும் சக்திவேலுவின் மனைவியின் அண்ணன் நந்தகோபால் மூலம், நகைகளை மாற்றி கொடுக்க உதவி செய்துள்ளார். நகைகளை விற்றும், மறுஅடகு, போலி ரசீது மூலம் பெற்ற பணத்தை அருண்குமார், சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். முக்கியமாக மது அருந்துவது, பெண்களுடன் பயணம், சீட்டாட்டம் போன்றவற்றில் பணத்தை தண்ணீராக செலவழித்துள்ளார்.
கடந்த தீபாவளி பண்டிகைக்கு அருண்குமார், தனது நண்பர்களை அழைத்து கொண்டு கேரளாவுக்கு சுற்றுலாவுக்கு சென்றார். ஒரு நாளைக்கு, 25 ஆயிரம் ரூபாய் வாடகையில் சொகுசு விடுதியை எடுத்து 'ஜாலியாக' பொழுதை கழித்துள்ளார். இன்னொருவர், தனது கள்ளக்காதலிக்கு, மெடிக்கல் ஷாப், டூவீலர், கார் என, பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். தற்போது, நகைகளை மீட்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நகைகளை விற்றும், மறுஅடகு, போலி ரசீது மூலம் பெற்ற பணத்தை அருண்குமார், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
முக்கியமாக மது அருந்துவது, பெண்களுடன் பயணம், சீட்டாட்டம் போன்றவற்றில் பணத்தை தண்ணீராக செலவழித்துள்ளார்
பணத்தாசையால் 'பறந்த' நாணயம்
பழனியப்பா பைனான்ஸில், ஒரு கிளைக்கு, மூன்று பேர் வீதம் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலான நபர்கள், பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். நீண்ட காலமாக வேலை செய்து வருவதாலும், ஊழியர்கள் மீது கடை உரிமையாளர் மிகுந்த நம்பிக்கையாக இருந்து விட்டார். கடையில் ஆடிட்டிங் கூட, ஆறு மாதம் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு செல்லும் போது, முன்கூட்டியே தகவல் சொல்லி வருவதால், உரிமையாளரின் நம்பிக்கையை, இவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். அருண்குமார் உள்ளிட்டோருக்கு இருந்த பணத்தசையால், ஆரம்ப கட்டத்தில் சிறிய தொகையை எடுத்தவர்கள், போக, போக பெரிய அளவுக்கு எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அருண்குமார் மட்டுமே, 80 லட்சம் ரூபாய் வரைக்கும் கையாடல் செய்துள்ளார். எனவே, நகை அடகு கடை நடத்துபவர்கள் இதுபோன்ற ஊழியர்கள் மீது நம்பிக்கையை மட்டும் வைக்காமல், கொஞ்சம் விழிப்போடு முறையாக கடையில் ஆய்வு செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.