/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 5.63 லட்சம் ! வரைவுப்பட்டியலில் 18.81 லட்சம் பேர்
/
நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 5.63 லட்சம் ! வரைவுப்பட்டியலில் 18.81 லட்சம் பேர்
நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 5.63 லட்சம் ! வரைவுப்பட்டியலில் 18.81 லட்சம் பேர்
நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 5.63 லட்சம் ! வரைவுப்பட்டியலில் 18.81 லட்சம் பேர்
UPDATED : டிச 20, 2025 01:17 PM
ADDED : டிச 20, 2025 08:55 AM

திருப்பூர்: சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்து, திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பட்டியலில் இருந்து 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஆண், பெண், மொத்தம் 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 வாக்காளர்கள் வரைவுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளில், கடந்த அக்டோபர் 27 வரையிலான பட்டியலில், 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 பேர், வாக்காளராக இடம்பெற்றிருந்தனர்.
கணக்கீடு பணிகள் முடிவடைந்து, தமிழகம் முழுவதும் நேற்று வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மனிஷ் நாரணவரே, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு பட்டியலை வெளியிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று, வரைவு பட்டியல் நகலை பெற்றுக்கொண்டனர்.
மாவட்டத்தின் எட்டு தொகுதிகளில் இருந்த மொத்த வாக்காளர், 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 பேரில், தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 23.05 சதவீதம் பேர், அதாவது, 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்; இவர்களில், 2 லட்சத்து 86 ஆயிரத்து 416 ஆண்கள்; 2 லட்சத்து 77 ஆயிரத்து 255 பெண்கள்; 114 திருநங்கைகள்.
வரைவு பட்டியலில், 9 லட்சத்து 83 ஆண்கள்; 9 லட்சத்து 70 ஆயிரத்து 817 பெண்கள்; 244 திருநங்கைகள் என, மொத்தம் 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 வாக்காளராக இடம் பெற்றுள்ளனர்.
பல்லடத்தில் அதிகம்
மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், பல்லடம் தொகுதியில் அதிக எண்ணிக்கையிலானோர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 907 பேர் (27 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர்.
பல்லடம் தொகுதியில், 4 லட்சத்து 19 ஆயிரத்து 197 வாக்காளர் இருந்த நிலையில், 57,781 ஆண்; 55,100 பெண்; 26 திருநங்கை என, 1 லட்சத்து 12 ஆயிரத்து 907 பேர் (27 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர்; வரைவு பட்டியலில், 1 லட்சத்து 48 ஆயிரத்து 511 ஆண்; 1 லட்சத்து 57 ஆயிரத்து 748 பெண்; 31 திருநங்கை என, மொத்தம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 290 வாக்காளர் உள்ளனர்.
* திருப்பூர் வடக்கு தொகுதியில், 4 லட்சத்து 7 ஆயிரத்து 72 வாக்காளர் இருந்த நிலையில், 58,754 ஆண்; 52,252 பெண்; 55 திருநங்கை என, 1 லட்சத்து 11 ஆயிரத்து 61 பேர் (27.3 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர்; வரைவு பட்டியலில், 1 லட்சத்து 45 ஆயிரத்து 628 ஆண்; 1 லட்சத்து 50 ஆயிரத்து 263 பெண்; 120 திருநங்கை என, மொத்தம் 2 லட்சத்து 96 ஆயிரத்து 11 வாக்காளர் உள்ளனர்.
* திருப்பூர் தெற்கு தொகுதியில், 2 லட்சத்து 72 ஆயிரத்து 295 வாக்காளர் இருந்த நிலையில், 45,115 ஆண்; 41,888 பெண்; 8 திருநங்கை என, 87 ஆயிரத்து 13 பேர் (32 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர்; வரைவு பட்டியலில், 90 ஆயிரத்து 697 ஆண்; 94 ஆயிரத்து 561 பெண்; 24 திருநங்கை என, மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 282 வாக்காளர் உள்ளனர்.
* காங்கயத்தில், 2 லட்சத்து 67 ஆயிரத்து 926 வாக்காளர் இருந்த நிலையில், 28,460 ஆண்; 28,987 பெண்; 13 திருநங்கை என, 57 ஆயிரத்து 460 பேர் (21.5 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர்; வரைவு பட்டியலில், 1 லட்சத்து 1,013 ஆண்; 1 லட்சத்து 9 ஆயிரத்து 442 பெண்; 11 திருநங்கை என, மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 466 வாக்காளர் உள்ளனர்.
* அவிநாசியில், 2 லட்சத்து 96 ஆயிரத்து 817 வாக்காளர் இருந்த நிலையில், 28,100 ஆண்; 27,975 பெண் என, 56 ஆயிரத்து 75 பேர் (18.9 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர்; வரைவு பட்டியலில், 1 லட்சத்து 15 ஆயிரத்து 394 ஆண்; 1 லட்சத்து 25 ஆயிரத்து 338 பெண்; திருநங்கை 10 என, மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 742 வாக்காளர் உள்ளனர்.
* உடுமலை தொகுதியில், 2 லட்சத்து 72 ஆயிரத்து 14 வாக்காளர் இருந்த நிலையில், 24,855 ஆண்; 26,836 பெண்; திருநங்கை 9 பேர் என, 51 ஆயிரத்து 700 பேர் (19.1 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில், 1 லட்சத்து 5 ஆயிரத்து 368 ஆண்; 1 லட்சத்து 14 ஆயிரத்து 926 பெண்; திருநங்கை 23 என, மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 317 வாக்காளர் உள்ளனர்.
* தாராபுரம் தொகுதியில், 2 லட்சத்து 66 ஆயிரத்து 127 வாக்காளர் இருந்த நிலையில், 24,862 ஆண்; 26,104 பெண்; திருநங்கை 3 பேர் என, 50 ஆயிரத்து 969 பேர் (19.15 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில், 1 லட்சத்து 3 ஆயிரத்து 700 ஆண்; 1 லட்சத்து 11 ஆயிரத்து 451 பெண்; திருநங்கை 7 என, மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 158 வாக்காளர் உள்ளனர்.
* மடத்துக்குளத்தில், 2 லட்சத்து 43 ஆயிரத்து 478 வாக்காளர் இருந்த நிலையில், 18,487 ஆண்; 18,113 பெண் என, 36 ஆயிரத்து 600 பேர் (15 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில், 99 ஆயிரத்து 772 ஆண்; 1 லட்சத்து 7,088 பெண்; திருநங்கை 18 என, மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 878 வாக்காளர் உள்ளனர்.

இடம்பெயர்ந்தோர் அதிகம்எட்டு தொகுதிகளில் நடைபெற்ற தீவிர திருத்தத்தில், இடம் பெயர்ந்தோர், இறந்தவர்கள், இரட்டை பதிவு வாக்காளர் மொத்தம் 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், இடம்பெயர்ந்தோரை அதிகம் நீக்கப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்தோர், 3 லட்சத்து 82 ஆயிரத்து 927 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், 1 லட்சத்து 58 ஆயிரத்து 457 பேரும்; இரட்டை பதிவு வாக்காளர் 22 ஆயிரத்து 401 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.
பெயர் உள்ளதா?
நேற்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் வரைவு பட்டியல், அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வசம் இருக்கும். வாக்காளர்கள், தங்கள் பி.எல்.ஓ.,வை அணுகி, பட்டியலில் பெயர் உள்ளதா என சரிபார்க்கலாம்.
ECINET மொபைல் செயலி, voters.eci.gov.in என்கிற இணையதளம் மற்றும், தலைமை தேர்தல் அதிகாரி, அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரின் இணையதளங்களிலும் சரிபார்க்கலாம்.
அவகாசம் எது வரை?
தகுதியிருந்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத வாக்காளர்கள் மற்றும் வரும் ஜனவரி 1 ல் 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள், படிவம் - 6 பூர்த்தி செய்து, அந்தந்த பி.எல்.ஓ.,க்களிடம் நேரடியாகவோ அல்லது Voters.eci.gov.in என்கிற தளத்தில் ஆன்லைனிலோ, ஜனவரி 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்கிற வாக்காளர் உதவி எண்ணையும் அழைக்கலாம்.
அரசியல் கட்சியினரும், வாக்காளரும், வரைவு பட்டியல் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் இருப்பின், ஜனவரி 18ம் தேதிக்குள், அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்கலாம்.
படிவங்கள் எதற்காக?சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்தநிலையில், ஜனவரி 1ம் தேதியை தகுதிநாளாக கொண்டு, புதிய வாக்காளர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. வரும் ஜன. 1ல் 18 வயது பூர்த்தியாகும் வாக்காளர்கள், பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, படிவம் - 6; வெளிநாடு வாழ் இந்தியர் வாக்காளராக படிவம் - 6 ஏ; பெயர் நீக்கத்துக்கு படிவம் - 7; முகவரி, மொபைல் எண் மாற்றம் உள்பட அனைத்துவகையான திருத்தங்களுக்காக, படிவம் 8 பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.
இறுதிப்பட்டியல் எப்போது?
வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் படிவம் 6 உள்பட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். தகுதியுள்ள வாக்காளர் சேர்க்கப்பட்டு, பிப். 17 ம் தேதி, வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
நேற்று வெளியான வரைவு பட்டியல் மட்டுமின்றி, பிப்ரவரியில் வெளியாகும் இறுதி பட்டியலையும் ஒவ்வொரு வாக்காளரும், தவறாமல் பார்வையிடவேண்டும்; தங்கள் பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.
ஆவணம் தயாரா?
எஸ்.ஐ.ஆர்., கணக்கீட்டு படிவத்தில், 2002ல் நடந்த தீவிர திருத்த பட்டியலில் இடம் பெற்ற வாக்காளரின் அல்லது பெற்றோரின் விவரங்களை குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. கணக்கீட்டு படிவத்தில், 2002 விவரங்களை பூர்த்தி செய்து வழங்கிய வாக்காளர்கள், எவ்வித ஆவணமும் சமர்ப்பிக்க தேவையில்லை.
2002 விவரங்களை பூர்த்தி செய்யாத, வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்படும். அந்த வாக்காளர்கள் மட்டும், தேர்தல் கமிஷன் பட்டியலிட்டுள்ள 13 ஆணவங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
என்னென்ன ஆவணம்?
மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனத்தின் நிரந்தர ஊழியர், ஓய்வூதியருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய ஆணை.
1987, ஜனவரி 1க்கு முன் இந்தியாவில், அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், தபால் அலுவலகம், எல்.ஐ.சி., பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை, சான்றிதழ், ஆவணம்.
தகுதியான அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்.பாஸ்போர்ட்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் மற்றும் பல்கலை கழகங்களால் வழங்கப்பட்ட மெட்ரிகுலேஷன், கல்வி சான்றிதழ்.
மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர இருப்பிடச்சான்று. வன உரிமை சான்று. பிற்படுத்தப்பட்ட , அட்டவணை வகுப்பினர் , பழங்குடியினர் அல்லது இதர சாதி சான்றிதழ்.
தேசிய குடிமக்கள் பதிவேடு (நடைமுறையில் உள்ள இடங்களில்).
மாநில, உள்ளாட்சி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்ப பதிவேடு.
அரசால் வழங்கப்பட்ட நிலம், வீடு ஒதுக்கீடு சான்றிதழ்.
ஆதார் கார்டு. (குறிப்பு, ஆதார் கார்டுடன் கூடுதல் ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்). 2025, ஜூலை 1 ம் தேதியை தகுதிநாளாக கொண்ட, பீஹாரின் சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியல் பிரதி)
இவ்விவரங்கள், வாக்காளருக்கு வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர்., படிவத்தின் பின்புறம் அச்சிடப்பட்டுள்ளது

