/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்பு சுவரை அகற்ற வேண்டும்!
/
ஆக்கிரமிப்பு சுவரை அகற்ற வேண்டும்!
ADDED : ஜன 29, 2024 11:56 PM

திருப்பூர்;வழித்தடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, காங்கயம் பகுதி பொதுமக்கள், திருப்பூர் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மலர், ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மொத்தம் 367 மனுக்கள் பெறப்பட்டன.
புள்ளக்காளிபாளையம் பொதுமக்கள்:
காங்கயம் தாலுகா, புள்ளக்காளிபாளையத்தில் 15 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில், தனியார் சிலர், வழித்தடத்தை ஆக்கிரமித்து, கழிப்பிடம், சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். மற்றொரு வழித்தடத்தில், சர்ச் தடுப்பு சுவர் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து, காங்கயம் தாசில்தாரிடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. நில அளவீடு செய்து, வழித்தடம் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.
பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்பேர் அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணசாமி:
திருப்பூரில் உள்ள வளர்மதி ரேஷன் கடைகளில், தயாரிப்பு, காலாவதி, விலை, எடை விவரங்கள் இன்றி பொட்டுக்கடலை விற்பனை செய்யப்பட்டது. இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட வளர்மதி கூட்டுறவு அங்காடி நிர்வாகம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கலெக்டர் தலையிட்டு, முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு அங்காடி நிர்வாகத்தை கலைக்கவேண்டும். கூட்டுறவுத்துறை இணை, துணை பதிவாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அ.ம.மு.க., வடக்கு ஒன் றிய செயலாளர் ஜெகநாதன்:
அவிநாசி ஒன்றியம், சேவூர் - தேவேந்திரன் நகரில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும். அவிநாசி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், ஊராட்சி செயலர்கள் 20 ஆண்டுகளுக்குமேல் ஒரே இடத்தில் தொடர்ந்து பணிபுரிகின்றனர்.
இதனால் பணிகள் நேர்மையாக நடைபெறுவதில்லை. ஊராட்சி செயலர்களை உடனடியாக பணியிட மாறுதல் செய்யவேண்டும்.