ADDED : பிப் 17, 2024 01:44 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், ஒன்றாக நகரின் முக்கிய தெருக்கள், பிரதான வீதிகளில், பெயர்ப் பலகைகள்; வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் வீதிகளின் பெயர் பலகைகள் அமைக்கும் பணி நடந்தது.
அவ்வகையில் முதல் கட்டத்தில், 8 கோடி ரூபாய் செலவில் இந்த பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பிற பகுதிகளில் சாலை குறியீடு மற்றும் பெயர்ப் பலகைகள், 9 கோடி ரூபாய் மதிப்பில் என மொத்தம், 17 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் இந்த பலகைகள் எழுத்துப் பிழைகளுடன் அமைந்துள்ளது. சில இடங்களில் பெயர் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில், பார்க் ரோடு பகுதியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து இரு பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றில், 'பார்க் ரோடு' எனவும், மற்றொன்றில் 'வெள்ளி விழா பூங்கா ரோடு' எனவும் இரு விதமாக எழுதப்பட்டுள்ளது.
இதுபோன்ற மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்களை, மாநகராட்சி நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.