ADDED : ஜூன் 17, 2025 11:33 PM
தாயை இழந்த குழந்தைகள்
திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியில், மூன்று குழந்தைகளுடன் தம்பதி வாழ்ந்து வந்தனர். கணவர் பாத்திர பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார். கணவரின் மதுகுடிக்கும் பழக்கத்தால், சம்பள பணத்தை சரியாக வீட்டுக்கு கொடுக்காமலும், வேலைக்கு சரியாக செல்லாமல், வீட்டில் மனைவி செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்து சென்று கணவர் குடித்து வந்தார். இதுபோன்று அன்றாடம் நடக்கவே, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி மனைவி தீக்குளித்தார். போதையில் இருந்த கணவன் தடுக்க சென்றார். அவருக்கு இரு கையிலும் தீக்காயம் ஏற்பட்டது. மனைவி இறந்த நிலையில், அதன் பின், இப்பழக்கத்தை கைவிட்டு கிடைத்த வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வருகிறார். குழந்தைகள் பாட்டி பராமரிப்பில் உள்ளனர். கணவரின் குடியால், வீட்டின் ஆலமரமான தாயை குழந்தைகள் இழந்தன.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, இந்த ஒரு சம்பவம் கூறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் மற்றும் நகர் பகுதியில், மது போதையால், நாள்தோறும் பல்வேறு குற்றங்கள் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, 'போக்சோ' குற்றங்கள் அதிகரித்து வருவதை கூற முடியும். இதேபோல, அடிதடி, தகராறு, வெட்டு குத்து என பல பிரச்னைகளும், போதையால் விளைவது குறிப்பிடத்தக்கது.