ADDED : டிச 01, 2024 11:15 PM

திருப்பூர்; அவ்வப்போது துாறல் மழை, இரவு வேளைகளில் கடும் பனிப்பொழிவு என, திருப்பூரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
வங்க கடலில் உருவான 'பெஞ்சல்' புயல் காரணமாக, சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக, காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம், பரவலாக, லேசான மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 3.21 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக நல்லதங்காள் ஓடையில் 10 மி.மீ., - வெள்ளகோவிலில் 9.60; வட்டமலைக்கரை ஓடையில் 8.60 மி.மீ.,க்கு மழை பெய்துள்ளது. காங்கயத்தில் 5.60; மூலனுாரில் 5; தாராபுரத்தில் 4; கலெக்டர் முகாம் அலுவலக பகுதிகளில் 3.60; மடத்துக்குளத்தில் 3; காங்கயத்தில் 3; உப்பாறு அணையில் 3; ஊத்துக்குளியில் 2.20 திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 2; பல்லடத்தில், 1.50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் நகர பகுதிகளில் நேற்றும் வானம் மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது; அவ்வப்போது லேசான துாறல் மழை பெய்தது. மாலை நேரத்தில் சற்று மிதமான மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. தற்போது பனிப்பொழிவும் துவங்கியதால், திருப்பூரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நீடிக்கிறது.