/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏழு ஆண்டாக திறக்கப்படாமல் வீணாகும் நடை மேம்பாலம்
/
ஏழு ஆண்டாக திறக்கப்படாமல் வீணாகும் நடை மேம்பாலம்
ADDED : ஜூலை 04, 2025 10:11 PM

உடுமலை; உடுமலையில், ஏழு ஆண்டுகளாக திறக்கப்படாமல், 'லிப்ட்' உடன் கூடிய நடை மேம்பாலம் வீணாகி வருகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்ட், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வரும் பொதுமக்கள், மருத்துவமனை, கடை வீதிகளுக்கு செல்ல போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ரோட்டை கடக்க 'லிப்ட்' உடன் கூடிய நடை மேம்பாலம் ஏழு ஆண்டுக்கு முன், ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. தொடர்ந்து இதனை பயன்பாட்டிற்கு திறந்து விடாமல், வீணாகி வருகிறது.
இதனால், நடை பாதை பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டும், சமூக விரோத செயல்கள் அரங்கேறும் மையமாக மாறியுள்ளது.
இரு புறமும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் அமைந்துள்ளதோடு, அருகிலுள்ள கடைகளில், விறகு, அடுப்பு என சமையல் அறையாகவும், பழைய பொருட்கள் இருப்பு மையமாகவும், லிப்ட் அறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் வரிப்பணம், ரூ. 1.50 கோடி வீணாகி வருவதோடு, கட்டுமானம் மற்றும் இரும்பு பொருட்கள் துருப்பிடித்து சிதிலமடைந்து வருகிறது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.