/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கல்குவாரி தொழில் வரன்முறைப்படுத்த வேண்டும்'
/
'கல்குவாரி தொழில் வரன்முறைப்படுத்த வேண்டும்'
ADDED : அக் 02, 2025 01:11 AM
திருப்பூர்; ''கல்குவாரி தொழிலை வரைமுறைப்படுத்தினால், தொழில் மேம்படுவதுடன் பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கட்டுமானப் பொருட்கள் கிடைக்கும்'' என, கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவரும், மாநில பொருளாளருமான பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில், 3,000க்கும் மேற்பட்ட கல் குவாரிகள், கிரஷர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 135 கல்குவாரிகள் மற்றும் 170 கிரஷர் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக தயாரிக்கப்படும் போல்டர் கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவை, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அரசுக்கு ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இயன்றளவு, மாசு ஏற்படாத வகையில் தொழில் செய்கிறோம்.
கடந்த, 2016ம் ஆண்டு, மத்திய அரசால் புதிய கனிமவள விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. 35 ஆண்டுக்கு முந்தைய பழைய குவாரிகள், அத்தகைய விதிமுறைப்படி இல்லை. பழைய கல்குவாரிகளுக்கு ஆழக்கட்டுப்பாடு விதிக்காமல் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.
இதனால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், பழைய குவாரிகளும், பயன்பாட்டுக்கு வரும். அரசாணை வெளியிடப்பட்ட பின், ஆண்டுகள் அடிப்படையில் கட்டணம் கணக்கிட்டு, அளவீடு செய்து, அதற்கேற்றாற்போல் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இதற்காக அபராதங்கள் விதித்தால் தொழில் செய்ய முடியாது.
குடியிருப்புகள் விவசாய நிலங்களுக்கு இடையேயான, 300 மீ., இடைவெளியை, 100 மீ., என்று குறைப்பதன் வாயிலாக, புதுப்பிக்கப்படாமல் உள்ள ஏராளமான குவாரிகள் பயன்பாட்டுக்கு வரும். கல் குவாரிகளை வரைமுறைப்படுத்த வேண்டும்.
கருத்துக்கேட்பு கூட்டங்களின் போது, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் பங்கேற்று, தவறான நோக்கத்துடன் பிரச்னை ஏற்படுத்துவதால், புதிதாக குவாரிகள் துவங்க முடியாத சூழல் உள்ளது. கருத்துக்கேட்பு கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சியா கமிட்டி, ஆழக்கட்டுப்பாடு விதிக்காமல், குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
புதிய குவாரிகளுக்கான லைசென்ஸ், எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுத்தால், புதிய தொழில் முனைவோர் அதிகரிப்பர். கல்குவாரி, கிரஷர் தொழில் முடங்கினால், அனைத்து கட்டுமான தொழில்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், விலைவாசி உயர்வையும் எதிர்கொள்ள நேரிடும். கல்குவாரி தொழில் மீது, தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி, இடர்பாடுகளை களைய வேண்டும்.