/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ரிசர்வ் சைட்டை' பாதுகாக்க வேண்டும்
/
'ரிசர்வ் சைட்டை' பாதுகாக்க வேண்டும்
ADDED : ஆக 20, 2025 01:05 AM

அவிநாசி; அவிநாசி நகராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம், அதன் தலை வர் தனலட்சுமி தலைமையில், கமிஷனர் வெங்கடேஸ்வரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
கவுன்சிலர்களின் விவாதம்:
கோபாலகிருஷ்ணன் (காங்): வள்ளுவர் வீதி, ஸ்ரீராம் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில், 1965ம் ஆண்டு க.ச.எண் 183 -1ஏ வில் 4.76 ஏக்கர் நிலத்தில், 3 ஏக்கருக்கு மட்டும் டி.டி. சி.பி.,யில் அனுமதி பெற்று மனைப்பிரிவுகளாக செய்தனர். அதில், 40 சென்ட் ரிசர்வ் சைட்டாக, அப்போதைய பேரூராட்சி வசம் ஒப்படைத்துள்ளனர். தற்போது மீதமுள்ள 1.52 ஏக்கரில் மனைப்பிரிவுகளாக மாற்றம் செய்ய அனுமதி கேட்டுள்ளனர்.
ஏற்கனவே மனை பிரிவுகளை வாங்கியவர்களுக்கான இடத்தையும், அப்போது மனை பிரிவுகளுக்காக போடப்பட்ட ரோடுகள், சாக்கடை கால்வாய் ஆகியவற்றுக்கு பாதிப்புகள் இல்லாமல் மனை பிரிவுகளை பிரிக்க நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளிக்கலாம். அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட வணிக வளாகம் துணை முதல்வர் திறந்து வைத்து எட்டு மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளது. எப்போது திறக்கப்படும்.
ஸ்ரீதேவி (அ.தி.மு.க.): புதிய பஸ் ஸ்டாண்ட், கைகாட்டிப்புதுார் பகுதியில் உள்ள இரு பக்கங்களிலும் உள்ள சாக்கடை கால்வாய் பாலங்கள், ஆழம் குறைவாக ரோட்டின் மட்டத்திற்கு உள்ளதால் மழைக்காலங்களில் ரவுண்டானாவில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அருகில் உள்ள கடைகளில், கோவிலிலும் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சாக்கடை கால்வாய்களை புதுப்பித்து கட்டித்தர வேண்டும்.
சரவணன் (சுயே): வீதிகளில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் வாட்டர்மேன்கள் பொதுமக்களிடம் அநாகரிகமாகவும், பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர். இது குறித்து, கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனலட்சுமி (தலைவர்): மனை பிரிவுகள் அங்கீகாரத்திற்காக டி.டி.சி.பி.,க்கு அனுப்பும் போது கட்டாயம் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட, 33 சென்ட் நிலத்தை அளந்து அளவீடு செய்யப்படும்.
ஏற்கனவே மனை பிரிவுகள் வாங்கியவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லாமல், மீதமுள்ள, 1.52 ஏக்கர் நிலத்தை பிரித்து விற்பனை செய்யவும் நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளிக்கப்படும். பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள புதிய வணிகவளாக கட்டட கடைகள் விரைவில் ஏலம் விடப்படும்.
இவ்வாறு விவாதம் நடத்தப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.