/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளங்களுக்கு தண்ணீர் கேட்டு தீர்மானம்: குடிமங்கலம் ஒன்றியத்தில் நிறைவேற்றம்
/
குளங்களுக்கு தண்ணீர் கேட்டு தீர்மானம்: குடிமங்கலம் ஒன்றியத்தில் நிறைவேற்றம்
குளங்களுக்கு தண்ணீர் கேட்டு தீர்மானம்: குடிமங்கலம் ஒன்றியத்தில் நிறைவேற்றம்
குளங்களுக்கு தண்ணீர் கேட்டு தீர்மானம்: குடிமங்கலம் ஒன்றியத்தில் நிறைவேற்றம்
ADDED : ஜன 01, 2024 10:59 PM
உடுமலை;குடிநீர் தேவைக்காக குளங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், பெரும்பாலான ஊராட்சிகளுக்கு பற்றாக்குறையாகவே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதனால், உள்ளூர் நீராதாரங்களான போர்வெல் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி, நிலைமையை சமாளிக்கின்றனர்.
இந்நிலையில், இந்தாண்டு போதிய மழை இல்லாத நிலையில், பெரும்பாலான ஊராட்சி போர்வெல்களில், நீர்மட்டம் சரிந்து விட்டது; கிராம குளங்களும் தண்ணீரின்றி வறண்டு விட்டன.
இப்பிரச்னைக்கு தீர்வாக, கிராம குளங்களுக்கு, பி.ஏ.பி., திட்டத்தின் கீழ், தண்ணீர் திறக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நான்காம் மண்டல பாசனம் துவங்கிய போதே, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளிலும், ஒன்றிய குழுவிலும், குளங்களுக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தில், 'சம்பந்தப்பட்ட ஊராட்சியின் மக்கள் தொகை, குளங்கள் மற்றும் போர்வெல்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளனர்; குளங்களும், போர்வெல்லும் தண்ணீர் இல்லாமல், வறண்டுள்ளதால், வரும் கோடை காலத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே, பாசன கால்வாய்கள் வாயிலாக குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம், பாசன சபையினர் வாயிலாக, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாக வழங்கப்பட்டது; அரசுக்கும் மனுவை அனுப்பினர்.
பல மாதங்களாகியும் தீர்மானம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான்காம் மண்டல பாசனத்தில், இரண்டாம் சுற்றுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என அப்பகுதி ஊராட்சி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

