ADDED : ஜூன் 16, 2025 11:47 PM

திருப்பூர்; பிளாஸ்டிக் கழிவுகளால் ஆண்டிபாளையம் குளம் மாசடையும் அபாயம் உள்ளது. இதற்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர், ஆண்டிபாளையம் குளம், படகுக்குழாம் வசதியுடன் கூடிய பொழுதுபோக்கு தலமாக மாறியுள்ளது.
மங்கலம் நல்லம்மன் தடுப்பணை மற்றும் ஒட்டணையில் இருந்து, இரண்டு வாய்க்கால்களில், ஆண்டிபாளையம் குளத்துக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது.
நல்லம்மன் தடுப்பணையில் இருந்து வரும் ராஜவாய்க்காலில், மங்கலம் நால்ரோடு மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நேரடியாக கலக்கிறது.
விவசாயிகளின் கோரிக்கை15 ஆண்டாக கிடப்பில்...
மங்கலம் நால்ரோடு பகுதியில், இறைச்சிக்கழிவுகள் கொட்டும் இடத்தில் இருந்து, குப்பைகள் ராஜவாய்க்காலில் கலக்கின்றன.
கழிவுநீர் கலக்காமல், கடந்து செல்லும் வகையில் குழாய் பதிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை, 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதாரக்கேடு ஏற்படுவது, ஆண்டிபாளையம் படகுக்குழாமில் எதிரொலிக்கும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஆண்டிபாளையம் குளம் சீர்கெடுவதை தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மங்கலத்தில் இருந்து வரும் ராஜவாய்க்காலில், சாக்கடை கழிவு கலப்பது மட்டும் பிரச்னையாக இருந்தது; தற்போது, டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகளும் கால்வாயை ஆக்கிரமிக்க துவங்கிவிட்டன. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் போது, பிளாஸ்டிக் கழிவுகள் அப்படியே குளத்துக்குள் தஞ்மடையும் அபாயம் உள்ளது.
ராஜவாய்க்காலுக்கு கீழ், சிமென்ட் குழாய் அமைத்து, கழிவுநீர் வாய்க்காலில் கலக்காமல், கடந்து செல்லும் வகையில், மாற்று ஏற்பாடுகளை உடனே துவக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆண்டிபாளையம் படகுக்குழாம் பாழாகும் அபாயம் உள்ளது.