/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்பால் சுருங்கிய சாலை விடுமுறை நாட்களில் வெட்ட வெளிச்சம்!
/
ஆக்கிரமிப்பால் சுருங்கிய சாலை விடுமுறை நாட்களில் வெட்ட வெளிச்சம்!
ஆக்கிரமிப்பால் சுருங்கிய சாலை விடுமுறை நாட்களில் வெட்ட வெளிச்சம்!
ஆக்கிரமிப்பால் சுருங்கிய சாலை விடுமுறை நாட்களில் வெட்ட வெளிச்சம்!
ADDED : ஜன 18, 2024 12:34 AM

திருப்பூர் : பிரதான சாலைகள், ஆக்கிரமிப்பால் சுருங்கியிருக்கிறது என்பதை, தொடர் விடுமுறை நாட்கள் உணர்த்துகின்றன.
பொங்கல் தொடர் விடுமுறையால், பரபரப்பாக வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் திருப்பூர் - அவிநாசி ரோடு உள்ளிட்ட பிரதான சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் கூட, வெகுவாக குறைந்திருக்கிறது. சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எவ்வித மன உளைச்சலுமின்றி பயணிக்கின்றனர்.
ஆனால், வழக்கமான நாட்களில், நிலை வேறு. சாலையின் கண்ணுக்கெட்டிய துாரம் வரை வாகனங்களின் அணிவகுப்பை தான் பார்க்க முடியும். ஆங்காங்கே, போலீசார் சார்பில் பொருத்தப்பட்டுள்ள 'சிக்னல்' கட்டுப்பாட்டில் வாகனங்கள் இயக்கப்பட்டால் கூட, சிக்கல் பயணத்தை தான் வாகன ஓட்டிகள் மேற்கொள்கின்றனர்.
இதற்கு காரணம், சாலையின் இருபுறமும் முளைக்கும் ஆக்கிரமிப்பு கடைகள், வரைமுறையின்றி 'பார்க்கிங்' செய்யப்படும் வாகனங்களால், சாலை 'சுருங்கி' போவது தான். குறிப்பாக, அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம் புதுார் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வாகனங்களை செலுத்துவதே, சவாலானது என்ற நிலைதான் உள்ளது.
சாலையோரம் உள்ள கடைக்காரர்கள், சாலையின் எல்லை வரை தங்களின் வியாபார பொருட்களை அடுக்கி வைத்திருப்பதால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கியபடி தான், வாகனங்களை ஓட்ட வேண்டியிருக்கிறது; அடிக்கடி விபத்தும் நடக்கிறது.
ஆனால், பொங்கல் பண்டிகைக்காக, பெரும்பாலான கடைகள், தொடர் விடுமுறை விட்டுள்ளன; ரோட்டோர ஆக்கிரமிப்புக்கடைகள் கூட அதிகளவில் இல்லை. சாலையின் சரியான நீளம், அகலம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம், எந்தளவுக்கு ரோடு ஆக்கிரமிக்கப்பட்டு 'சுருக்க'ப்படுகிறது என்பதையும் உணர முடிகிறது.
எனவே, இச்சாலையில் நெரிசலுக்கு காரணம் இயற்கையாய் அமைந்துவிட்ட சாலை கட்டமைப்பு காரணமல்ல; மாறாக, கட்டமைப்பை கபளீகரம் செய்து வைக்கப்படும் ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்பதையும் அறிய முடிகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இச்சாலையில் நெரிசல், விபத்து நேரிடாத வகையிலான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.