ADDED : ஜன 21, 2025 11:58 PM

திருப்பூர்; திருப்பூர் - மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே, மழைநீர் ரோட்டில் தேங்கியும், மாதக்கணக்கில் கசிவுநீர் வடிந்து செல்வதாலும், ரோடு அடிக்கடி சேதமானது. குண்டும், குழியுமாக மாறிய ரோடால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.
மழைநீர் ரோட்டில் தேங்குவதை தவிர்த்து, குளத்துக்கு தண்ணீரை கொண்டு செல்லும் வகையில், இரண்டு இடங்களில் சிறுபாலம் அமைக்கும் பணி துவங்கியது. ரோடும், உயர்த்தப்பட உள்ளது. முதல்கட்டமாக, ரோட்டின் வடபுறம் சிறுபாலம் பணி நிறைவடைந்துள்ளது. தென்புறம் சிறுபாலம் பணி துவங்க இருக்கிறது. போக்குவரத்துக்கு வசதியாக, பணி முடிந்த சிறுபாலத்தின் மீது செம்மண் கொட்டி மண் பாதை அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், மழைநீர் வடிந்து செல்ல இடமில்லாமல், ரோட்டின் மையத்தில் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால், 'டூ வீலரில்' சென்றால், சறுக்கி விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்றுவர வேண்டியுள்ளது. எனவே, பணி முடிந்த பகுதிகளில், 'கிரஷர்' கலவையை பயன்படுத்தி, மழையால் பாதிப்பு இல்லாத ரோடு அமைத்து கொடுக்க வேண்டும்.