ADDED : அக் 11, 2024 11:50 PM

அவிநாசி : திருமுருகன் பூண்டி நகராட்சிக்குட்பட்ட தண்ணீர் பந்தல், அம்மாபாளையம் செக்போஸ்ட் அருகிலும், ராக்கியாபாளையம் ரோடு, தேவராயம்பாளையம் செல்லும் ரோடுகள் உள்ளிட்ட பகுதிகளிலும், சாலை பல்லாங்குழிகளாக காணப்படுகின்றன.
அவிநாசியில் இருந்து திருப்பூர் வரை செல்லும் அனைத்து பகுதிகளிலும், திருமுருகன் பூண்டி நகராட்சி பகுதியிலும், இரண்டாவது குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.
பணிகள் முடிந்து ஒரு வருட காலம் நெருங்கியும் குடிநீர் குழாய்கள் இணைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் பல பகுதிகளில் பெரும் பள்ளங்களாக மாறி உள்ளது. மழைக்காலம் என்பதால் மழை நீர் தேங்கி நிற்கும் குழிகளில் டூவீலர்கள் அதிகளவில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட டூவீலர்கள் விபத்துக்குள்ளாகி பலர் பலத்த காயமுற்றுள்ளனர்.
நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல மாதங்களாக ரோடு பராமரிப்பு பணிகள் கிடப்பில் உள்ளதால், கடந்த வாரம் அம்மாபாளையம் செக்போஸ்ட் அருகே உள்ள பெரிய பள்ளங்களை ரோந்து வாகன போலீசார் மணல், செங்கல், சிமென்ட் கலவை ஆகியவற்றை நிரப்பி சீரமைத்தனர்.
மாநில நெடுஞ்சாலை துறையினர் விரைந்து செயல்பட்டு அனைத்து பகுதிகளிலும் உள்ள பழுதடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும்.