ADDED : பிப் 06, 2026 05:20 AM

அவிநாசி: அவிநாசி அருகே கற்கால மனிதர்கள் ஆயுதங்களை கூர்தீட்டுவதற்கு பயன்படுத்திய பாறை கண்டறியப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, பழங்கரை கிராமத்தில் தனியார் தோட்டத்தில் கற்கால மனிதர்கள் ஆயுதங்களை கூர்தீட்டுவதற்கு பயன்படுத்திய பாறை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாறை, 5 ஆயிரம் முதல், 8 ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள், தங்களின் வேட்டைக்கும், சுய பாதுகாப்புக்கும் பயன்படுத்திய ஈட்டிகள், கைகோடரி போன்ற கல்லால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை கூர்தீட்ட பயன் படுத்தியுள்ளனர்.
கல்வெட்டு ஆர்வலர் அவிநாசியை சேர்ந்த ஜெய்சங்கர் கூறியதாவது:
பழங்கரையிலுள்ள தனியார் தோட்டத்தில் ஆயுதங்களை கூர்தீட்ட பயன்படுத்திய பாறை மிகவும் பழமையானது. நீள் வட்ட வடிவில் குழி போன்ற அமைப்பாக காணப்படுகின்றன. பாறையில், 20க்கும் மேற்பட்ட ஆயுதங்களை கூர் தீட்டிய அமைப்புகள் உள்ளன.
இதேபோன்ற பாறை கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அரிதாக காணப்படுகிறது. இதன் வாயிலாக, அவிநாசி அதன் சுற்று வட்டார பகுதியில் கற்கால மனிதர்களின் நடமாட்டம், 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது தெரிய வந்துள்ளது.

