/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தலை'யின்றி தவிக்குது ஆர்.டி.ஓ. அலுவலகம்
/
'தலை'யின்றி தவிக்குது ஆர்.டி.ஓ. அலுவலகம்
ADDED : டிச 20, 2025 08:56 AM

திருப்பூர்: திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு(ஆர்.டி.ஓ.), பத்து மாதமாக வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக்கப்படாததால், நிர்வாக பணி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆய்வாளர் இருந்த நிலையில், ஒருவர் பணி உயர்வு பெற்று சென்றதால், ஒரே ஆய்வாளர் அனைத்து பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.
திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ.,வாக இருந்த ஜெயதேவராஜ் தர்மபுரி வட்டார போக்குவரத்து துறை அதிகாரியாக பணிமாறுதல் பெற்று பிப்., மாதம் சென்று விட்டார். திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ. வெங்கிடுபதிக்கு வடக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
வடக்கில் ஆய்வாளர் இருவர் இருந்த நிலையில், பணியில் இருந்த பாஸ்கர் பதவி உயர்வு பெற்று உடுமலைக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக சென்று விட்டார்; தற்போது, கவின்ராஜ் என்ற ஒரு ஆய்வாளர் மட்டுமே பணியில் உள்ளார்.
ஆர்.டி.ஓ. பணியிடம் ஆறு மாதமாக நிரப்பப்படாத நிலையில், ஆய்வாளர் பணியிடமும் காலியாகி உள்ளது. மாநிலத்தில் அதிக வாகனப் பதிவு உள்ள, பிஸியான பத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் திருப்பூர் வடக்கு அலுவலகம் ஒன்று. காரணம் இங்குள்ள மக்கள் தொகை, வாகன நெருக்கம். ஆனால், ஆர்.டி.ஓ. மற்றும் ஆய்வாளர் ஒருவரும் இல்லாததால், நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
விடுப்பு எடுக்க முடியாமல், கோர்ட் அலுவல் பணி, அலுவலக பணி, வாகனங்கள் தணிக்கை மற்றும் ஆய்வு, புதிய பதிவெண் ஒப்புதல், தகுதிச்சான்றிதழ் என அனைத்தையும் ஒரே ஆய்வாளரே மேற்கொள்ள வேண்டியுள்ளது. வீரபாண்டி பிரிவில் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகம், ஏழு கி.மீ. தள்ளி, சிறுபூலுவப்பட்டியில் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகமும் உள்ளது.
கண் துடைப்பு ஒரே ஆர்.டி.ஓ (தெற்கு) இரண்டு அலுவலகங்களையும், தினமும் வந்து நிர்வாகிப்பது சிரமமாக உள்ளது. நிர்வாக பணிகளை முழுமையாக கவனிக்க ஆளில்லாததால், விதிமீறல் வாகனங்கள் ஆய்வு, ஏர்ஹாரன் பறிமுதல், வேகமெடுக்கும் தனியார், மினிபஸ்கள் மீது நடவடிக்கை எல்லாம், கண் துடைப்பாக உள்ளது.
அலுவலர்கள் தரப்பில் விசாரித்தால்,'மாநிலம் முழுதும், 20 ஆர்.டி.ஓ. பணியிடம் காலியாக உள்ளது; திருப்பூரின் நிலை பற்றி கருத்துரு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் தான் முடிவெடுக்க வேண்டும்,' என்கின்றனர்.

