ADDED : ஏப் 30, 2025 12:33 AM

திருப்பூர் வளர்ந்துவரும் தொழில் நகரம். பல லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இம்மாநகராட்சியில், தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பல பகுதி களிலிருந்தும் வந்து செல்கின்றனர்.
அவ்வகையில், தினமும், 3 லட்சம் பேர் என்ற அளவில் வெளியூர்களிலிருந்து திருப்பூர் வந்து செல்வதாக, அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவர்களில், பெரும்பாலானோர் பஸ் மற்றும் ரயில்களை பயன்படுத்துகின்றனர். அவ்வகையில் மினி பஸ்கள், டவுன் பஸ்கள் மற்றும் வெளியூர் பஸ்கள், அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, பி.என்., ரோடு, காலேஜ் ரோடு, ஆகிய பிரதான ரோடுகள் வழியாக வந்து செல்கின்றன.
பிரதான ரோடுகளில் அனைத்திலும், பல இடங்களில் பஸ் ஸ்டாப்கள் உள்ளன. பொதுவாக பஸ் ஸ்டாப் என்றாலே, நிழற்குடை அமைப்புடன் அமைந்திருக்கும். மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் இந்த நிழற்குடைகளில் தான் தஞ்சம் அடைந்திருப்பர்.
திருப்பூர் நகரைப் பொறுத்தவரை ஒன்றிரண்டு பஸ் ஸ்டாப்பில் கூட, பெரும்பாலான நிழற்குடை இல்லை என்பதுதான் யதார்த்தம். பல பகுதிகளில் நிழற்குடை என்பது பெயரளவுக்கு கூட இல்லாத அவலம் தான் உள்ளது.
அவிநாசி ரோட்டில் தண்ணீர் பந்தல், குமார் நகர், காந்தி நகர், பெரியார் காலனி, பங்களா ஸ்டாப் உள்ளிட்ட ஸ்டாப்கள் எந்த இடத்தில் உள்ளது என்பதற்கு அடையாளமாகக் கூட நிழற்குடைஎன்பதே இல்லை.
ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட சில பஸ் ஸ்டாப்களில் பஸ் நிற்குமிடத்துக்கும் நிழற்குடைக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. பல்லடம் ரோட்டிலும், வீரபாண்டி, டி.கே.டி., வீரபாண்டி பிரிவு, தென்னம்பாளையம் உள்ளிட்ட பகுதி களில் பஸ் ஸ்டாப் அனைத்தும் கடைகள் ஆக்கிரமித்துள்ளன.
தாராபுரம் ரோட்டிலும், செட்டிபாளையம், புதுார் பிரிவு போன்ற இடங்களிலும் நிழற்குடை கிடையாது. காங்கயம் ரோட்டில், சி.டி.சி., கார்னர் பஸ் ஸ்டாப் பொருட்கள் இருப்பு வைக்கும் இடமாக காட்சியளிக்கிறது.
நகரில் உள்ள ஒரு சில நிழற்குடைகள் போதை ஆசாமிகள், ரோட்டில் சுற்றித்திரியும் நபர்களால் ஆக்கிரமித்தும் காணப்படுகிறது.
பல்வேறு பகுதிகளில் நடைபாதை கடை, தள்ளு வண்டி கடைகளால் வியாபார ஸ்தலமாக மாறி விட்டது. இது போன்ற காரணங்களால் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் நிலை அந்தோ பரிதாபம் என்ற வகையில் நடுரோட்டில், வெயில், மழை என அனைத்தையும் தாங்கிக் கொண்டு தான் செல்லும் நிலையில் உள்ளது.
மூன்று முறை 'ரிபீட்டு'
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் நிழற்குடைகளை தனியார் பங்களிப்புடன் நவீன முறையில், புனரமைப்பு செய்யமாநகராட்சி பட்ஜெட் உரையில் மேயர் தெரிவித்தார்.
அவ்வகையில் கடந்த 2023 - 24 மற்றும் 2024 - 25ம் நிதியாண்டு பட்ஜெட் உரையில் இது இடம் பெற்றிருந்தது. மீண்டும் நடப்பு 2025 -26ம் நிதியாண்டு பட்ஜெட் உரையிலும், தவறாமல் இதே அறிவிப்பு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அமைக்கப்படும்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குறைந்தபட்சம், 10 பஸ் ஸ்டாப்களை நவீன முறையில், தனியார் பங்களிப்புடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், கழிப்பிட வசதியும், சிறிய அளவிலான கடையும் அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு தனியார் நிறுவன விளம்பரங்கள் அமைத்தும் அதன் மூலம் நிர்வாகத்துக்கு வருவாய் ஈட்டும் திட்டம் உள்ளது. இதனை அமைக்க இடம் முடிவு செய்து, நன்கொடையாளர்கள் அணுகி பணிகள் துவங்கப்படும். இதில் நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி பெற்ற பின்பே அமைக்க வேண்டும் என்பதால் சற்று தாமதமாகிறது.
- தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி மேயர்.