/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை நகரில் அன்று தகித்த 'செய் அல்லது செத்து மடி' முழக்கம்
/
பின்னலாடை நகரில் அன்று தகித்த 'செய் அல்லது செத்து மடி' முழக்கம்
பின்னலாடை நகரில் அன்று தகித்த 'செய் அல்லது செத்து மடி' முழக்கம்
பின்னலாடை நகரில் அன்று தகித்த 'செய் அல்லது செத்து மடி' முழக்கம்
ADDED : ஆக 07, 2025 11:21 PM

திருப்பூர்; நம் நாடு சுதந்திரம் பெற அச்சாரமாக விளங்கிய 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம், பின்னலாடை நகரிலும் தகித்துள்ளது.
'வெள்ளையனே வெளியேறு' போராட்டம், சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான ஓர் இயக்கம்.கடந்த 1942, ஆக., 8ம் தேதி 'இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் வெளியேற வேண்டும்' என வலியுறுத்தி, அப்போதைய பம்பாய்(இப்போது மும்பை) நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'பிரிட்டிஷ் அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லையெனில், காந்தியடிகள் தலைமையில் பெரும் அளவில் அகிம்சை வழியில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்' என தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதுதான் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்திற்கான துவக்கம். 'இந்த போராட்ட அனல், திருப்பூரிலும் தகித்தது' என்கின்றனர், வரலாற்று ஆர்வலர்கள்.
திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் சிவதாசன் கூறியதாவது:பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மகாத்மா காந்தி கொண்டு வந்த தீர்மானத்தின் செயல் வடிவமாக, பிரிட்டிஷாருக்கு எதிராக, 'வெள்ளையனே வெளியேறு' என்ற கோஷமும், இந்திய மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் 'செய் அல்லது செத்து மடி' என்ற கோஷமும் முன்னிறுத்தப்பட்டது.
பிரிட்டிஷ் அரசு இதை ஏற்க மறுத்து, முக்கிய தலைவர்களை கைது செய்தது. இந்த போராட்டம் தொடர்பான விளக்க சுற்றறிக்கையை தமிழகம் முழுவதும் சென்று சேரும்படி செய்தார் காமராஜர்.'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை ஆதரித்து, திருப்பூரிலும் சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், தியாகி சுந்தராம்பாள், பொங்காளி முதலியாருடன் பலரும் கைதாகி சிறை சென்றதாக சான்றுகள் கூறுகின்றன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேவி பழனியப்பன், சோமனுார் முருகப்பன், குப்புசாமி, கா.பொங்காளி முதலியார், பழனியப்பன், சுப்ரமணியன், தெய்வானை முதலியார், நல்லப்ப முதலியார், வெங்கடாசலம், சின்னப்பன், பழனிச்சாமி உள்ளிட்டோர் நினைவு கூரத்தக்கவர்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.
- இன்று 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 83வது ஆண்டு துவக்க நாள்.