/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
6 காலம் தோண்டிய மண் மாயமாச்சு ... குடிநீர் என்னாச்சு? கேள்விக்கணையுடன் பாய்ந்த கவுன்சிலர்கள்
/
6 காலம் தோண்டிய மண் மாயமாச்சு ... குடிநீர் என்னாச்சு? கேள்விக்கணையுடன் பாய்ந்த கவுன்சிலர்கள்
6 காலம் தோண்டிய மண் மாயமாச்சு ... குடிநீர் என்னாச்சு? கேள்விக்கணையுடன் பாய்ந்த கவுன்சிலர்கள்
6 காலம் தோண்டிய மண் மாயமாச்சு ... குடிநீர் என்னாச்சு? கேள்விக்கணையுடன் பாய்ந்த கவுன்சிலர்கள்
ADDED : அக் 06, 2025 11:47 PM
திருப்பூர்;''திருப்பூரில் பல்வேறு வார்டுகளில் குடிநீர் வினியோகம் தாமதம் ஆகிறது'' என, மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் அமித் முன்னிலை வகித்தனர்.
இதில் இடம்பெற்ற கவுன்சிலர்கள் விவாதம்:
* செந்தில்குமார் (காங்.): மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் போன்றவற்றில் குழாய் பதித்தல், தொட்டி அமைத்தல் போன்ற பல பணிகளுக்கு குழி தோண்டி மண் எடுக்கப்பட்டது. இந்த மண் எவ்வளவு கிடைத்தது; எவ்வளவு, எங்கு பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள மண் எங்கு எவ்வளவு உள்ளது. இது வெளியே விற்கப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பயன்பாட்டு கட்டணம் நான்கு மடங்கு உயர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மன்றத்தின் கவனத்துக்கே வராமல் இது எப்படி உயர்ந்தது. இதை நிறுத்தி வைக்க வேண்டும். உரிய விளக்கம் அளிக்க வேண்டும். குடிநீர் இரு நாளுக்கு ஒருமுறை வழங்குவதாக மேயர் கூறுகிறார். ஆனால், 10 நாளுக்கு மேலாகிறது. குழாய்கள் சேதம் உடனடியாக சரி செய்வதில்லை. ஒப்பந்த நிறுவனத்தின் பில் தொகையை நிறுத்தி வைக்க வேண்டும். இப்பிரச்னையில் ஆள் மாற்றி ஆள் கையைக் காட்டி பொறுப்பை தட்டிக் கழிக்கின்றனர். மக்களிடம் பதில் பேச முடியவில்லை. குப்பை பிரச்னையில் உரிய தீர்வு காண வேண்டும். மூன்று மாதத்துக்குள் மீண்டும் பிரச்னை ஏற்படும்.
ஆக்கிரமிப்பு விவகாரத்தில்
'வலியவன் - எளியவன்'
* சேகர் (அ.தி.மு.க.): வளர்ச்சி பணிகள் அடிப்படை வசதிகள் குறித்து மண்டலம் மற்றும் மன்ற கூட்டத்தில் பேசியும், கடிதம் அளித்தும் மாதக்கணக்காகியும் நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வலியவன், எளியவன் என்ற நிலை தான் உள்ளது. காலேஜ் ரோடு ஆக்கிரமிப்பு, பூங்கா ஆக்கிரமிப்பு என எதன் மீதும் நடவடிக்கை இல்லை.
* கவிதா (தி.மு.க.): சாலை அமைக்கும் பணிக்கு பூஜை போட்டு 3 மாதமாகியும் பணி துவங்கவில்லை. குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. ஆறுமாதமாக இந்தநிலை குறித்து தொடர்ந்து கூறியும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
வேண்டும் 400 விளக்கு
வந்ததோ 100 மட்டுமே
* தங்கராஜ் (அ.தி.மு.க.): ரிங் ரோடு பகுதியில் வடிகால் கட்டும் பணி தனி நபர் பிரச்னையால் கிடப்பில் போட்டுக் கிடக்கிறது. எனது வார்டில் 400 தெரு விளக்குகளில் 100 மட்டுமே வந்துள்ளது. மின் வாரியத்துக்கு பணம் செலுத்தவில்லை என்கின்றனர். மன்ற கூட்டத்தில் தொடர்ந்து பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
* திவ்யபாரதி (அ.தி.மு.க.): அங்கேரிபாளையம் மயானத்தில் கொட்டிய குப்பை இன்னும் அகற்றப்படவில்லை. நகர் நல மையம் கட்டி முடித்தும் இன்னும் திறக்கவில்லை; மருத்துவர்கள் பணியமர்த்தவில்லை.
* கவிதா (அ.தி.மு.க.): குடிநீர் முறையாக வருவதில்லை. வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகள் கண்காணித்து பணிககளை விரைவுபடுத்த வேண்டும்.
பணிகள் தாமதம்
மக்கள் கோபம்
* செல்வராஜ் (இந்திய கம்யூ.): நடுநிலைப்பள்ளி கட்டடம் கட்டும் பணி நான்கு மாதமாக துவங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். பணிகள் தாமதமானால் மக்களுக்கு நிர்வாகத்தின் மீது கோபம் வருகிறது. தனியார் குழாய் பதிப்பு பணிக்கு குழி தோண்டுவதால், குடிநீர் குழாய்கள் சேதமானது. குடிநீரில் சேறு கலந்து வருகிறது.
* சுபத்ராதேவி (தி.மு.க.): சாந்தி நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கவில்லை. இடுவாய் ரோடு அகலப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும்.
* ஜெயசுதா (தி.மு.க.): சென்னிமலைபாளையம் ரோட்டில் அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும். அப்பகுதியில் தற்போது குப்பை கொண்டு கொட்டப்படுவதால் அப்பகுதியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.