/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆலய மணி' ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும்!
/
'ஆலய மணி' ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும்!
ADDED : பிப் 04, 2024 01:57 AM

'ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்' என்று 'பாலும் பழமும்' திரைப்படப்பாடல் இன்றும் பலரும் விரும்பிக்கேட்கும் பாடலாக உள்ளது. அனுப்பர்பாளையம் பகுதியில் ஆலய மணியின் தயாரிப்பும் காலம் உள்ள வரை, சிறக்கும்.
அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம் பகுதிகளில், பாத்திரத் தயாரிப்பு மட்டுமின்றி, ஆலய மணி உற்பத்தியும் நடக்கிறது. ஆலய மணி உற்பத்தியில் சில குறிப்பிட்ட பட்டறைகள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றன. நானுாறு கிராம் முதல், நுாறு கிலோ எடை வரையிலான ஆலய மணி உலோகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேவைப்படும் ஆலய மணியின் எடை மற்றும் உய ரம் அளவுக்கு செம்மண், வண்டல் மண், களிமண், கொடு மண் ஆகியவை கலந்த மண் கலவையால் அச்சு எடுத்து கொள்கின்றனர். பின், மூசை என்னும் மண் பாத்திரத்தில் துத்தநாகம், செம்பு, வெள்ளி ஆகியன கலந்த உலோகக் கலவையை உருக்கி அச்சில் ஊற்றுகின்றனர்.
சில மணி நேரம் கழித்து மண்ணை அகற்றி மணியை எடுத்து பாலீஷ் செய்கின்றனர்.
ஆலய மணி உற்பத்தி செய்யும் பட்டறை உரிமையாளர் செந்தில் கூறியதாவது:
உற்பத்தி செய்யப்படும் ஆலய மணி தரமானதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் ஆர்டரை வழங்குவதாலும் இங்கு ஆர்டர் கொடுக்க பலர் விரும்புகின்றனர். தமிழகத்தில், திருவண்ணா மலை, ஆத்துார், கள்ளக்குறிச்சி, கும்பகோணம், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும், அதுபோல், பெங்களுர், கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் வருகிறது.
தை, மாசி, பங்குனி உள்ளிட்ட மாதங்களில் கோவில் விஷேசங்கள் அதிகமாக இருக்கும் இந்த நேரங்களில் அதிக ஆர்டர் வரும். அதுபோல் கோவில் கும்பாபிஷேக காலங்களிலும் ஆர்டரை எதிர்பார்க்கலாம். இந்து கோவில் மட்டுமல்லாமல் கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்தும் அதிக அளவில் ஆர்டர் வரும். இவ்வாறு, செந்தில் கூறினார்.
100 கிலோ மணி... 9 கிலோ 'நாக்கு'
துத்தநாகம், செம்பு கலந்த கலவையில் ஆலய மணி உற்பத்தி செய்யப்படுகிறது. மணியின் ஓசை அதிகமாக இருக்க வெள்ளியும் கலக்கப்படுகிறது. நுாறு கிலோ எடை கொண்ட மணிக்கு ஒலி எழுப்பும் நாக்கு பகுதி ஒன்பது கிலோவில் அமைக்கின்றனர். அப்போதுதான் ஒலிஅதிகமாக இருக்கும்.