/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரைத்த மாவையே அரைக்கும் கதையாக... ஊராட்சிகளில் 'வழக்கமான' கிராம சபை
/
அரைத்த மாவையே அரைக்கும் கதையாக... ஊராட்சிகளில் 'வழக்கமான' கிராம சபை
அரைத்த மாவையே அரைக்கும் கதையாக... ஊராட்சிகளில் 'வழக்கமான' கிராம சபை
அரைத்த மாவையே அரைக்கும் கதையாக... ஊராட்சிகளில் 'வழக்கமான' கிராம சபை
ADDED : அக் 29, 2025 12:50 AM
திருப்பூர்: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு கிராம சபையில் கூட, கிராம ஊராட்சிகள் எதிர்கொள்ளும் தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான அறிவிப்பு எதுவும் இல்லை. 'அரைத்த மாவையே அரைக்கும் கதையாக, ஒரே தீர்மானமே திரும்ப, திரும்ப அறிவுறுத்தப்படுகிறது' என, கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் புலம்புகின்றனர்.
அடுத்த மாதம், (நவ.,) 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்ட அரசு அறிவுறுத்தி, அதற்கான வழிகாட்டுதல் மற்றும் கிராம சபையில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரகம் வழங்கியுள்ளது.
இதில், வீடுகள் துவங்கி அரசு அலுவலகங்கள் வரை, மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கிராமங்களில் துாய்மைப்பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை வசதி கொண்ட கிராம ஊராட்சிகள், தங்கள் பணியில் முழு கவனம் செலுத்தி, 'மாடல் வில்லேஜ்' (மாதிரி கிராமம்) என்ற நிலையை எட்ட வேண்டும். அந்தந்த ஊராட்சியின் தகுதியை வரையறை செய்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' எனவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி செயலர்கள் கூறியதாவது:
திருப்பூரை பொருத்தவரை, 98 சதவீத ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், தோல்வியுற்றிருக்கிறது. குப்பைக்கொட்ட இடமில்லாதது; வீடு வீடாக குப்பை சேகரிகப்பட்டாலும், அவற்றை கொட்டுவதற்கோ, தரம் பிரிப்பதற்கோ பிரத்யேக இடம் இல்லாதது; வீடுகளில் எண்ணிக்கைக்கு ஏற்ப துாய்மைப்பணியாளர்கள் இல்லாதது; மிகக்குறைந்த சம்பளம் வழங்கப்படுவதால், துாய்மைப்பணியில் முழு ஈடுபாடுகாட்ட துாய்மைப் பணியாளர்கள் தயங்குவது போன்ற பல பிரச்னைகள் உள்ளன. இதனால், கிராம ஊராட்சிகளின் பல இடங்களில் குப்பை குவியலை தான் பார்க்க முடியும்.
அதே போன்று, அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள் பள்ளி, கல்லுாரிகள், திருமண மண்டபங்கள், பொது கட்டடங்கள் என, அனைத்து கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும், ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும், தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆனால், கிராம ஊராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பும் கட்டாயமாக்கப்படுவதில்லை. இதனால், கிராம ஊராட்சிகளில் மழைநீர் பெருமளவில் வீணாகி, ரோடு, கால்வாய்களில் ஓடுகிறது.
எனவே, உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு கிராம சபை கூட்டத்திலாவது, திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல், சிரமங்களை களையவும், தேவையான தொழிலாளர்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தெளிவுபடுத்துமா ஊரக வளர்ச்சித்துறை!: மாவட்டத்தில் உள்ள, 265 கிராம ஊராட்சிகளில் எத்தனை கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செவ்வனே செயல்படுகிறது? ஊராட்சிகள் வாயிலாக எத்தனை கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது? என்பது உள்ளிட்ட விவரங்களை, மாவடட ஊரக வளர்ச்சித்துறை வெளியிட வேண்டும் என்பது, உள்ளாட்சி தின நாளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

