/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்ந்த மனிதர் மதிப்பு குறைக்குது உழைக்கும் மனிதர் ஊதியம் கரைக்குது
/
உயர்ந்த மனிதர் மதிப்பு குறைக்குது உழைக்கும் மனிதர் ஊதியம் கரைக்குது
உயர்ந்த மனிதர் மதிப்பு குறைக்குது உழைக்கும் மனிதர் ஊதியம் கரைக்குது
உயர்ந்த மனிதர் மதிப்பு குறைக்குது உழைக்கும் மனிதர் ஊதியம் கரைக்குது
ADDED : செப் 30, 2024 05:36 AM
பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி, விவசாயம், கறிக்கோழிப்பண்ணைகள் சாய ஆலைகள், பஞ்சு நுால் மில்கள் உள்ளிட்ட தொழில்களை சார்ந்து பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். வட மாநில மற்றும் தென் மாவட்ட தொழிலாளர்கள் பலர், பல்லடம் வட்டார பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்க்கின்றனர். வருவாயை பெருக்கும் நோக்கில், பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு குடிபெயரும் தொழிலாளர்கள் பலர், மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்றனர்.
தற்கொலை, அடிதடி, கொலை, பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்கின்றன. போதையில், தந்தையே தனது குழந்தையை கொலை செய்தது, போதை தலைக்கேறி நண்பனை கொலை செய்தது என, பல்வேறு சம்பவங்களும் இதற்கு உதாரணமாக பல்லடத்தில் நடந்துள்ளன. குடும்பத் தலைவரை இழந்து, பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன.
பல்லடம் பகுதியில், மொத்தம், 22 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில், வடுகபாளையம், மாணிக்காபுரம், சுக்கம்பாளையம், கரைப்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த பொது மக்களின் போராட்டம் காரணமாக, சில மதுக்கடைகள் அகற்றப்பட்டன.
ஆனால், வெவ்வேறு இடங்களில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. படிப்படியாக மதுக்கடைகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனியார் பார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குடியிருப்புகள், பள்ளி கல்லுாரி, கோவில்கள் உள்ளிட்ட இடத்தில் மதுக்கடை இருக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே, 200 மீ., தொலைவில் பகிரங்கமாக டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் செயல்படுகிறது. இதேபோல், வெட்டுப்பட்டான்குட்டை, நொச்சிபாளையம், அவரப்பாளையம், சிங்கனுார் என, பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், விதிமுறையை பின்பற்றாமல், காலையிலேயே கடை திறப்பதும், அரசு விடுமுறை நாட்களில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதும், பல காலமாக நடந்து வருகிறது. டாஸ்மாக் அதிகாரிகள், போலீசார் மற்றும் சில போலி பத்திரிகையாளர்கள் என, அனைவரும் உரிய முறையில் கவனிக்கப்படுவதால், தங்கு தடையின்றி மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குகின்றன. ஆளும் கட்சியின் நேரடி தலையீடு காரணமாக, நேர்மையான சில அதிகாரிகளும் செயல்பட முடிவதில்லை.
உயர்ந்த மனிதர்களின் மதிப்பைக் கூட குலைப்பதாகவும், உழைக்கும் மனிதர்களின் ஊதியத்தைக் காணாமல் போகச்செய்வதாகவும் மதுக்கடைகள் மாறிவருகின்றன.