/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் திருப்பணி ஆறு மாதமாக ஆமை வேகம்
/
கோவில் திருப்பணி ஆறு மாதமாக ஆமை வேகம்
ADDED : பிப் 16, 2024 01:42 AM

பல்லடம்;பல்லடம் பாலதண்டாயுதபாணி கோவில் திருப்பணி துவங்கி ஆறு மாதங்கள் ஆகியும், ஆமை வேகத்தில் நடந்து வருவது பக்தர்களை கவலையடைய செய்துள்ளது.
பல்லடம்,- மங்கலம் ரோட்டில், செல்வ விநாயகர் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. பழமையான இக்கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாத நிலையில், கடந்த ஆண்டு திருப்பணி மேற்கொள்ள உள்ள கோவில்களின் பட்டியலில் இடம் பெற்றது.
உபயதாரர்கள், பக்தர்கள் பலர் கோவில் திருப்பணியை மேற்கொள்ள முன் வந்தனர். தொடர்ந்து, கோவில் சிலைகள் அகற்றப்பட்டு, பாலாலயம் செய்யப்பட்டது. இதையடுத்து, விநாயகர், முருகப்பெருமானை பக்தர்கள் சக்தி வடிவமாக வணங்கி வருகின்றனர்.
பாலாலயம் முடிந்ததும் திருப்பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்கள் ஆகியும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
கோவில் ஸ்தபதி அனுமதி பெறப்பட்டும் பணிகள் துவங்காமல் இருப்பது பக்தர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பக்தர்கள் கூறுகையில், 'ஏற்கனவே இது போல மாகாளியம்மன் கோவில் திருப்பணிகள் துவங்கி, பின் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, விநாயகர் பாலதண்டாயுதபாணி கோவிலும் அதேபோல் ஆகிவிடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
பாலாலய கும்பாபிஷேகம் முடிந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இருப்பினும், திருப்பணி நடைபெறாமல் உள்ளது.
இதன் பிறகு திருப்பணி துவங்கிய அருளானந்த ஈஸ்வரர் கோவிலும்கூட விரைவாக நடந்து வருகிறது. ஆனால், பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு தாமதப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை.
அறநிலையத்துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு, கோவில் திருப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.