ADDED : ஆக 13, 2025 01:03 AM

ம ணியகாரம்பாளையம் பகுதியில் புதிய கழிப்பிடம் கட்டும் பணி தாமதமாகிறது. பழைய கழிப்பிடமும் மூடப்பட்டதால் பெரும் அவதி நிலவுகிறது.
திருப்பூர் மாநகராட்சி, 46வது வார்டு மணியகாரம்பாளையம் பகுதியில் ஏ.டி., காலனியில் மாநகராட்சி சார்பில், கட்டிய பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டில் இருந்தது.
இந்த கழிப்பிடம் மிகவும் பழுதான நிலையில், அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அக்கழிப்பிடத்தை மூடி விட்டு, வேறிடத்தில் புதிய கழிப்பிடம் கட்ட திட்டமிடப்பட்டது.
புதிய கழிப்பிடம் கட்டும் பணி துவங்கி மாதக்கணக்காகிறது. இருப்பினும் முழுமையாக முடிக்கப்படாமல் பாதியில் கிடப்பில் போட்டுக் கிடக்கிறது.
இதனால், அப்பகுதியினர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதிய கழிப்பிடமும் கட்டி முடிக்கப்படாமல், பழைய கழிப்பிடமும் பயன்படுத்த முடியாத நிலையில் அவர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் அருகேயுள்ள திறந்த வெளிப் பகுதியை பயன்படுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது. பொதுக்கழிப்பிட கட்டுமானப் பணியை விரைந்து செய்து முடித்து பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.