/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊர் கூடி மகிழ்ந்த கொண்டாட்டம்! திருப்பூர் பொங்கல் திருவிழா கோலாகலம்
/
ஊர் கூடி மகிழ்ந்த கொண்டாட்டம்! திருப்பூர் பொங்கல் திருவிழா கோலாகலம்
ஊர் கூடி மகிழ்ந்த கொண்டாட்டம்! திருப்பூர் பொங்கல் திருவிழா கோலாகலம்
ஊர் கூடி மகிழ்ந்த கொண்டாட்டம்! திருப்பூர் பொங்கல் திருவிழா கோலாகலம்
ADDED : ஜன 18, 2024 12:26 AM

திருப்பூர் : திருப்பூர் நொய்யல் கரையில் நடந்த, பொங்கல் திருவிழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்தும், பாரம்பரிய நிகழ்ச்சிகள் கண்டுகளித்தும், ஆடிப்பாடியும் விளையாடி மகிழ்ந்தனர்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில், திருப்பூர் பொங்கல் திருவிழா மூன்று நாள் நிகழ்ச்சியாக கடந்த 15ம் தேதி துவங்கியது. நொய்யல் கரையோரத்தில், அமைச்சர், மேயர், எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்புடன் விழா துவங்கியது.
நொய்யல் பண்பாட்டு அமைப்பு சார்பில் இரு நாள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக, மாநகராட்சியுடன் இணைந்து ஜீவநதி நொய்யல் சங்கத்தினர், 1,008 பொங்கல் வைக்கும் விழாவை முன்னெடுத்தனர்.
இதற்காக, வளர்மதி பாலம் முதல் கமல விநாயகர் கோவில் முன் இதற்கான அடுப்புகள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். முன்னதாக மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. பொங்கல் வழிபாட்டுக்குப் பின், கொங்கு பண்பாட்டு மையம் சார்பில், பெருஞ்சலங்கையாட்டம், வள்ளிக்கும்மி, காவடியாட்டம், ஒயிலாட்டம் ஆகியன நடந்தது.
பெருகிய உற்சாகம்
இதில் மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து ஆடி அவர்களை உற்சாகப்படுத்தினர். பாரம்பரிய முறையில், வேட்டி சட்டை அணிந்தும், மாட்டு வண்டி ஓட்டியும் முக்கிய பிரமுகர்கள், அரசு துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர், வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
மும்மதங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கமல விநாயகர் கோவிலில் வழிபட்டு, நொய்யல் கரையில் கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல்களுடன், பொதுமக்கள் மற்றும் பல்துறை கலைஞர்கள் பங்கேற்ற கொண்டாட்டம் நடைபெற்றது. காணும் பொங்கல் விழாவை திரளான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.