/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முத்தரப்பு கூட்டம் ஒன்றிய நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
/
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முத்தரப்பு கூட்டம் ஒன்றிய நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முத்தரப்பு கூட்டம் ஒன்றிய நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முத்தரப்பு கூட்டம் ஒன்றிய நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
ADDED : பிப் 20, 2024 11:01 PM
உடுமலை;குடிநீர் வினியோக தட்டுப்பாட்டை தவிர்க்க, ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோடை துவங்கியுள்ளதால், குடிநீர் வினியோகத்திலும் பிரச்னைகள் தலைதுாக்க துவங்கியுள்ளன. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
உடுமலையில் 38, குடிமங்கலத்தில் 23 ஊராட்சிகளும் உள்ளன. திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதில் பல கிராமங்களில் குழாயில் உடைப்பு ஏற்படுவது, குடிநீர் கசிந்து கொண்டிருப்பது, பொதுக்குழாய்களிலிருந்து தண்ணீர் வீணாவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாள்தோறும் குடிநீர் தொடர்ந்து லட்சக்கணக்கான லிட்டர் வீணாகிறது.
மேலும் சில பகுதிகளில் முறைகேடாக மோட்டார் வைத்து இழுப்பது, புதிய இணைப்புகள் கூடுதலாக வைத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகளால், தேவையுள்ள பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
தவிர, கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாலும், முறையான வினியோகம் நடப்பதில்லை.
கிராமங்களில், குறிப்பிட்ட நாட்களுக்கு சுழற்சி முறையில், குறிப்பிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.
ஆனால் வரைமுறை இல்லாமல், ஒரு சில குடியிருப்பு பகுதிகளுக்கு, குறைந்த இடைவெளியிலும், மற்ற பகுதிகளுக்கு கூடுதல் நாட்கள் இடைவெளியிலும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதனால், கிராம மக்கள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகின்றனர். சீரான குடிநீர் பெறுவதற்கு தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியத்தில் புகார் அளிக்கின்றனர்.தற்போது கோடையும் துவங்க உள்ளதால், குடிநீர் வினியோகம் அதிகளவில் தடைபடும் என கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் முறையான, சீரான குடிநீருக்கு, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட எதிர்பார்க்கின்றனர்.
குடிநீர் பிரச்னைகள் குறித்து, தீவிரமான நடவடிக்கை எடுப்பதற்கும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், உள்ளாட்சி பிரதிநிதிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உள்ளடக்கிய முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

